Advertisment

திண்டுக்கல்லில் இ.டி அதிகாரி கைது;  மதுரை இ.டி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிரடி சோதனை

திண்டுக்கலில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதையடுத்து, மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
dvac raid at ed office

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி கைது

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள மருத்துவர் சுரேஷ்பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம்  ஆண்டு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

Advertisment

அமலாக்கத்துறை அதிகாரியாக அங்கித் திவாரி 2018-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் பணியில் சேர்ந்த நிலையில், ஏப்ரல் 2023-ல் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  

இதைத் தொடர்ந்து, மருத்துவர் சுரேஷ்பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கபடுவதாகக் கூறியும் இந்த வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றுவதற்கு 3 கோடி ரூபாயை தருமாறு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் கேட்டுள்ளார். இதற்கு மருத்துவர் சுரேஷ்பாபு சம்மதிக்காததால், பின்னர் அவர் மிரட்டப்பட்டு பேரம் பேசி இறுதியாக 51 லட்சம் தர வேண்டும் என மிரட்டப்பட்டுள்ளார். 

இதையடுத்து,  மருத்துவர் சுரேஷ்பாபு 01.11. 2023-ல் முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் வழங்கியுள்ளார். இரண்டாவது கட்டமாக பணம் கேட்டு அவர் தொடர்புகொண்டபோது, இது தொடர்பாக மருத்துவர் சுரேஷ் பாபு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அனுப்பினர். 

இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தோமையார்புரம் அருகே மருத்துவர் சுரேஷ்பாபு கொடுத்த பணத்தை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வாங்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரை கையும் களவுமாக கைது செய்ய முற்பட்டனர். ஆனால், அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் காரை இடித்துவிட்டு அவருடைய காரில் தப்பிச் சென்றார். அவரை லஞ்சை ஒழிப்புத் துறை போலீஸார் 15 கி.மீ விரட்டிச் சென்று கொடைரோடு சோதனை சாவடியில் மடக்கி கைது செய்தனர். அவரிடம் திண்டுக்கல் இ.பி. காலனியில் உள்ள திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அலுவலகத்தில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. 

விசாரணைக்கு பின்னர், திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நீதிபதி மோகானா இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை டிசம்பர் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதையடுத்து, மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் அங்கித் திவாரிக்கு சொந்தமான வீட்டிலும் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

முன்னதாக, மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக வருகை தந்தனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாத நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதனால், நீண்ட நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். இதையடுத்து, அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனிடையே, அமலாக்கத்துறை அதிகாரிகளின் பாதுகாப்புக்காக மத்தியப் படைகள் வரவழைக்கப்பட்டனர். ஆயுத ஏந்திய இந்தோ திபேத் எல்லைப் பாதுகாப்பு படையினர் வருகையால் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அங்கேயும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

DVAC
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment