கோயம்புத்தூரில் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக புதிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை வானவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் நல சங்கம் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த வாசகங்கள் தாங்கிய ஆட்டோ ரிக்ஷா பேரணியை பி1 காவல் நிலைய ஆய்வாளர் ஜமுனா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
கோவை புல்லுக்காடு பகுதியில், வானவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த 25 ஆட்டோ ரிக்ஷாக்கள் போதைப்பொருள் எதிர்ப்புப் பதாகைகளுடன் அப்பகுதியின் வீதிகளில் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின.
வானவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் நல சங்கத்தின் தலைவர் ஜே. இப்ராம்ஷா இது குறித்துப் பேசுகையில், போதைப்பொருள் பிரச்சனை தனிமனிதப் பிரச்சனை மட்டுமல்ல என்றும், ஒரு நாட்டின் வீழ்ச்சிக்கு அது வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார். உலகிலேயே ஐந்தில் ஒரு பகுதி இளைஞர்களைக் கொண்ட நம் நாட்டில், இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதால் தேசத்தின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகி விடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதைக்கருத்தில் கொண்டு, வானவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் நல சங்கம் தொடர்ச்சியாகப் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இந்தப் பிரசாரத்தை தொடர்ந்து நடத்துவதாகவும், அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த இயக்கத்தில் ஒத்துழைப்பு வழங்கி கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் சிறுபான்மை மாவட்ட தலைவர் யூகே உமர் கத்தாய், வானவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் நல சங்க செயலாளர் ஏ உசேன், 88வது மாமன்ற உறுப்பினர் அகமது அபீர், துணைச் செயலாளர் சமூசுல்குதா, கௌரவத் தலைவர் கோபிநாத் மற்றும் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.