தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிரான அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஆலைக்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. கல்வீச்சு, தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறின. காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கடந்த 22 ஆம் தேதி முதல் தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், வடபாகம், மத்திய பாகம், முத்தையாபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தூத்துக்குடி கலவர வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த கலியூர் ரஹ்மான் (46), அவரது மகன்கள் முகமது அணஸ் (23), முகமது இஷ்ரத் (22), உசிலம்பட்டியைச் சேர்ந்த கோட்டையன் (31), தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன் (26), திருநெல்வேலியைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய 6 பேரை தூத்துக்குடி சிப்காட் போலீஸார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்திருந்தனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த இவர்கள் 6 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதன் பேரில் 6 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த ஆறு பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆறு பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், பசீர் அகமது அமர்வு முன் நடைபெற்றது. அப்போது தேசிய பாதுகாப்பு சட்டம் மாநிலத்திற்கும் சேர்த்து தான், அதனால் தான் இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், தேசத்தில் தான் மாநிலம் உள்ளதாக அரசு தரப்பில் வாதிட்டனர்.
இதனையடுத்து வழக்கின் தீர்ப்பினை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு, ஆறு பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.