நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்ரமணியனை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி மோகனூர் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது தொடர்பாக முதலில் மோகனுர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கை நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றபட்டது.
தனது மரணம் தொடர்பாக சுப்பிரமணியன் எழுதிய கடிதத்தை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏ-வுமான பழனியப்பனின் பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பிய போது பழனியப்பன் ஆஜராகி விளக்கமளித்தார்.
இரண்டாவது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை போலீசார் தேடி வந்தனர். இதனை அடுத்து கடந்த வாரம் புதன்கிழமை முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனியப்பன் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலில் மர்ம மரணம் என்று கூறப்பட்ட வழக்கு பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றபட்டதும் தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றப்பட்டுள்ளது. எனவே விசாரணை முடியாத நிலையில் எதன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திர்கள்? சிபிசிஐடி போலீஸாருக்கு வேறு வேலை இல்லையா ? ஒரு முதல்வர், நீதிபதிகள், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு கூறி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டால் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்வீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதன் பின்னர், தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் புகாரில் கைது செய்து விசாரிப்பதற்கான தேவை இல்லை என இந்த நீதிமன்றம் கருதவில்லை. மேலும், போலீஸார் கூறும் குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாராம் இல்லை என கூறியதுடன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தென்னரசு ஆகியோருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், ரூ.10 ஆயிரம் பிணைத் தொகையும், அதே தொகைக்கான இரு நபர் உத்திரவாதம் அளிக்க வேண்டும். தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.