பத்திரிகை மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ச்சியாக மிரட்டி வருவதாக அப்போலோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் சர்ச்சை ஏற்படுத்தியதையடுத்து, அது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து தங்கள் மருத்துவர்களிடம் ஆணையம் விசாரிக்க தடை கோரியும், விசாரணை ஆணையம் அமைத்த அரசாணையை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பல்லோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த பிரபல மருத்துவர்களை போதுமான கால அவகாசம் வழங்காமல் உடனே ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி கட்டாயப்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், மருத்துவர்கள் ஆஜராகாவிட்டால், மருத்துவமனை இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்கள் மூலமாக தாங்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்தார். விசாரணைக்கு ஆஜராகி மருத்துவர்கள் அளிக்கும் வாக்குமூலங்கள், பதில்கள் முறையாக பதிவு செய்வதில்லை தவறாக ஆணையம் பதிவு செய்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆணையம் போதிய மருத்துவ நிபுணத்துவம் இல்லாத ஆணையத்தின் இந்த செயல்களால் அப்போலோ மருத்துவமனையின் மதிப்பு பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
சிகிச்சையின் போது, ஜெயலலிதா பழரசங்கள் மட்டுமே அருந்தியதாக தெரிவித்த அப்போலோ நிர்வாகம், சிகிச்சை அளிக்கப்பட்ட 75 நாட்களும் அரசு அதிகாரிகள், அமைச்சர்களின் எடுபிடிகள், காவல்துறையினர் என இரு நூறுக்கும் மேற்பட்டோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டதாலேயே உணவு கட்டணம் 1 கோடியே 15 லட்சம் ஆனதாக விளக்கமளித்தார்.
ஆறுசாமி ஆணையத்தின் இந்த செயல்பாட்டால் அப்போலோ நிர்வாகம் மற்றும் சசிகலா ஆகியோர் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பி.எஸ்.ராமன், தங்கள் மருத்துவர்களிடம் விசாரணை நடத்த மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து ஆணையத்தின் தரப்பில் பதில் வாதங்களை வைக்க வழக்கு விசாரணை மீண்டும் நாளைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.