தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராகியிருக்கும் ராதாபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ அப்பாவு தமிழக மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே திமுகவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட சிலருடைய பெயர் சபாநாயகர் பதவிக்கு அடிப்பட்ட நிலையில் திமுக ஆட்சி அமைத்த பிறகு அப்பாவு சட்டப்பேரவை சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராகியிருக்கிறார்.
தேர்தல் முடிவை எதித்து 5 ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் அப்பாவு
கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிப்பு வெளியானது. வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட குளறுபடியால் தவறாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதாக தேர்தல் முடிவை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் அப்படியேதான் இருக்கிறது. இந்த தேர்தலில் அப்பாவுதான் வெற்றி பெற்றார் என்று திமுகவினர் நம்புகிறார்கள். ஆனால், தவறாக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதால் அப்பாவு 5 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் என்று திமுகவினர் கூறுகிறார்கள்.
ராதாபுரத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் அப்பாவு
அப்பாவு ஆரம்பத்தில் காங்கிரஸ்காரராக இருந்தவர். 1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அப்பாவு ராதாபுரம் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து வந்த 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதே ராதாபுரம் தொகுதியில் அப்பாவு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு, அவர் திமுகவில் இணைந்தார். அடுத்து, 2006ம் ஆண்டு சட்டம்னறத் தேர்தலில் மீண்டும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றார். ஆனால், 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 49 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 2016ம் ஆண்டு தேர்தல் முடிவை எதிர்த்துதான் அப்பாவு 5 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
15 ஆண்டுகள் எம்.எல்.ஏ- வாக உள்ள அப்பாவு, தொகுதியிலும் அரசியல் களத்திலும் நல்ல பெயர் உள்ளவர். அப்பாவு தமாகாவில் இருந்து வந்தாலும் திராவிட இயக்க கொள்கைகளில் பிடிப்புள்ளவராக திமுகவினரால் கருதப்படுகிறார்.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு, திமுகவின் முன்னாள் எம்.பி சுப்புலட்சுமி ஜெகதீசனுக்குதான் சபாநாயகர் பதவி வழங்க ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், சுப்புலட்சுமி ஜெகதீசன் பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால், யார் சபாநாயகர் என்ற விவாதம் நடைபெற்று வந்த நிலையில், ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவுக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் யாரும் அமைச்சரவையில் இடம் பெறாத நிலையில், மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக அப்பாவுக்கு சபாநாயகர் பதவி அளித்துள்ளார் என்கிறார்கள் திமுக வட்டாரங்கள்.
ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக நீண்ட அனுபவமும் சபை நடத்துவது தொடர்பான நடைமுறைகள் அறிந்த அப்பாவு சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சியினரை வழக்கமாக நடத்தும் விதத்தில் இருந்து மாறுபட்டு இணைந்து செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு அடையாளமாகத்தான், சென்னையில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், ஸ்டாலினின் நோக்கப்படி அவையை சுமூகமாக நடத்துவார் அப்பாவு என்கிறார்கள் திமுக வட்டாரங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.