நெல்லையில் தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை பாதிப்புகளை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டனர். ஆனால், இதுவரை எந்த நிதியும் வழங்கப்படவில்லை.
அக்டோபர் 1-ம் தேதி இந்திய அளவில் 14 மாநிலங்களுக்கு புயல் வெள்ளம் பாதிக்கப்பட்டது தொடர்பாக தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டது. குஜராத் மாநிலத்திற்கு 600 கோடி ரூபாயும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 1492 கோடி, ஆந்திராவிற்கு 1200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை. தமிழகம் கேரளா தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை, மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை, அனைவருக்கும் கல்வித் திட்டத்திலும் இதுவரை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, தமிழகத்தை சேர்ந்தவர் தான் நிதி அமைச்சராக இருக்கின்றனர். தொடர்ந்து தமிழகத்தை ஏன் வஞ்சிக்கின்றனர் என செய்தியாளர்கள் தான் அவர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.
தமிழகத்தில் தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஒன்றிய அரசு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மத்திய அரசு நிதி வழங்காதது குறித்து அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“