சபாநாயகர் நாற்காலில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசக் கூடாது என்றும் வேண்டுமென்றால் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் எனக்கூறி அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அமளியில் ஈடுபட்டதால், இந்த கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இ.பி.எஸ் பேசுகையில்” கள்ளச்சாராய விவகாரம் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதால் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தோம். விதிகளை பின்பற்றி கடிதம் கொடுக்குமாறு சபாநாயகர் கூறினார். அதன்படி கொடுத்தாலும் சபாநாயகர் பேச அனுமதி மறுக்கிறார். இந்த அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை. பல பேர் இறந்து குடும்பம் அனாதையாக நிற்கிறது. சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை.எங்களை வலுகட்டாயமாக வெளியேற்றி உள்ளார். சபாநாயகர் நடுநிலையோடு பேசவில்லை. அவரின் கருத்துகள் வேதனை அளிக்கிறது. சபாநாயகர் அரசியல் பேச வேண்டும் என்றால் ராஜினாமா செய்துவிட்டு பேச வேண்டும். அந்த இருக்கையில் அமர்ந்து நடுநிலையாடு பேச வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அவசர அவசராமாக ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்ள தீர்மானம் கொண்டு வருகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது. மற்றவர்களின் துயரத்தை பற்றி ஆளுங்கட்சிக்கு கவலையில்லை. சம்பிரதாயத்திற்காக சட்டசபை கூட்டத்தொடரை நடத்துகின்றனர். ஒரு நாளில் 5 மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்கள். எப்படி பேச முடியும்? அவையில் நாங்கள் பேசுவதை தடுக்கின்றனர். பேச முடியாது என்று கூறிவிட்டு முதல்வர் மட்டும் எப்படி 15 நிமிடங்கள் பேசுகிறார்? வேண்டும் என்றே திட்டமிட்டு நாங்கள் வெளியேறிய பிறகு பேசுகின்றனர்” என்று அவர் கூறினார்.