2019 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தால் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக வரும் செப்.15ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கிவைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர்கள் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், முதல்வர் முகாம் அலுவலகத்திலிருந்து நேற்று (செப்.11) காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழாவானது வருகிற 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது” என்றார்.
மேலும், “தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும்.
ஏடிஎம் கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக அனைவருக்கும் விரைவில் வழங்கப்பட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து குறைபாடுகளை தீர்க்க இலவச எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது. அது குறித்து மு.க. ஸ்டாலின், “, பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll-Free எண்ணும் சேர்க்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்” என்றார்.
தொடர்ந்து, “ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் மாபெரும் திட்டம் இது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதம் தோறும் பயனடையும் திட்டம் இது” என்றார்.
இந்தத் திட்டத்தில் அரசின் கணக்கெடுப்பின்படியே 55 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விடுபட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“