/tamil-ie/media/media_files/uploads/2017/12/z1000.jpg)
சென்னை டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியின் முதல்வர் சந்தானத்தின் பி.எச்.டி. ஆய்வு திருடப்பட்டது என்பது உறுதியானதையடுத்து, அவரது பதவியை சென்னை பல்கலைக்கழகம் திரும்ப பெற்றுக்கொண்டது.
சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றிய சந்தானம், கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில், கொரட்டூரை சேர்ந்த ரெஜினா வின்செண்ட் என்பவர், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், பேராசிரியர் சந்தானத்தின் பி.எச்.டி.ஆய்வுக் கட்டுரையின் ('The Validation of a Computer Simulation Model Using Spectral Analysis’) மூன்று அத்தியாயங்கள், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஒருவரின் கட்டுரையிலிருந்து திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்.
பேராசிரியர் சந்தானத்திற்கு கடந்த 2001-ஆம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவில் பி.எச்.டி. பட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, சென்னை பல்கலைக்கழகம் இதனை விசாரிக்க நிபுணர்கள் குழுவை அமைத்தது. அதன் விசாரணையில், சந்தானத்தின் பி.எச்.டி ஆய்வு கட்டுரையின் 3 அத்தியாயங்களும், முழுக்க முழுக்க அப்படியே அமெரிக்க ஆய்வாளரின் கட்டுரையிலிருந்து திருடப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது.
பி.எச்.டி போன்ற ஆய்வு தளங்களில் இத்தகைய திருட்டுகள் நடைபெறுவது அதிகமாகிவரும் நிலையில், புகழ்பெற்ற கல்லூரியின் முதல்வரே அத்தகைய திருட்டில் ஈடுபட்டிருப்பது கல்வி துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பேராசிரியர் சந்தானத்தின் முதல்வர் பதவியை சென்னை பல்கலைக்கழகம் திரும்ப பெற்றுக்கொண்டது. சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் இதற்கென தீர்மானமும் நிறைவேற்றியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.