/indian-express-tamil/media/media_files/2024/12/12/hztteX6iT8LwowUFnG8V.jpg)
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் வகையில் தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில், மத்திய அரசு, தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம், யு.ஜி.சி 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் வகையில் தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், மத்திய அரசு, தமிழக ஆளுநர் மாளிகை, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) மற்றும் உயர் நீதிமன்ற வழக்கில் மனுதாரரான வெங்கடாஜலபதி ஆகியோர் 4வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடைக்கு தடை விதிப்பது குறித்து அடுத்த விசாரணையின்போது முடிவு எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் வகையில் தமிழக அரசு மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிலுவையில் உள்ள 9 மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. அதைத்தொடர்ந்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பல்கலைக்கழகங்களை அரசியல் சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், துணைவேந்தர் நியமிக்கும் நடைமுறை துவங்கிவிட்டதாகவும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு முரணாக சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இதற்கு உயர்கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், "ஆளுநரை, பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் இருந்து நீக்கவில்லை. துணைவேந்தர் நியமன அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசிதழ் தவறானது. இந்த அரசிதழ் ஜோடிக்கப்பட்டது, உண்மையானதல்ல. இது மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என எந்த காரணங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை" என்றார்.
இதையடுத்து, பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், தமிழக அரசு சட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நரசிம்மா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு இன்று (04.07.2025) விசாரணை நடத்தியது. அப்போது, வழக்கு தொடர்பான தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, ஆளுநர் மாளிகை, யுஜிசி மற்றும் உயர் நீதிமன்ற இடைக்கால தடை விதிக்கப்பட்ட வழக்கின் மனுதாரர் வெங்கடாஜலபதி உள்ளிட்டவர்கள் 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிப்பது குறித்து அடுத்த விசாரணையின்போது முடிவு செய்யலாம் எனக் கூறி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.