நெல் போக்குவரத்து ஒப்பந்தங்களில் ரூ.922 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்கள் அநியாயமாக ஆதாயம் அடைந்திருப்பதாகவும் குற்றம்சாட்டி, இந்த ஒப்பந்தங்களை அனைத்து மாவட்டங்களிலும் ரத்து செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஊழல் எதிர்ப்பு அமைப்பான அறப்போர் இயக்கம் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளது. மேலும், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உடந்தையுடன் இந்த ஒப்பந்தங்கள் நியாயமற்ற மற்றும் ஊழல் முறையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், ரூ.922 கோடி ஊழல் மற்றும் சில நிறுவனங்களுக்கு அநியாய ஆதாயம் குறித்து மார்ச் 11-ம் தேதி அறப்போர் இயக்கம் புகார் அளித்ததாகக் கூறியுள்ளார். உணவுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மற்றும் மத்திய அரசின் இந்திய உணவுக் கழகம் (FCI) ஆகியவற்றின் அதிகாரிகள், ஒப்பந்தம் ஒதுக்கீட்டில் நிறுவனங்களுடன் கூட்டுச் சதி செய்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“இருப்பினும், இன்றுவரை, புலனாய்வு அமைப்புகளால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவும் இல்லை, சம்பந்தப்பட்ட துறையால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படவும் இல்லை. ஒப்பந்ததாரரை அநியாயமாக ஆதாயப்படுத்த, சட்டவிரோதங்களால் நிரப்பப்பட்ட இந்த டெண்டர் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு கோரி / வலியுறுத்தி இந்த பிரதிநிதித்துவத்தை நாங்கள் உங்களுக்கு எழுதுகிறோம். இதன் மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வரிப்பணம் சேமிக்கப்படும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர் அறிவிப்பின்படி, நெல் போக்குவரத்துக்கான காலம் ஜூன் 2023 முதல் ஜூன் 2025 வரை என்றும் ஜெயராம் சுட்டிக்காட்டினார். இருப்பினும், ஜூலை 2024 இல் ஒப்பந்தம் வழங்கப்பட்டபோது, டெண்டர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட காலத்தை மீறி ஜூன் 2026 வரை பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது என்று அவர் கூறினார், மேலும் டெண்டர் அறிவிப்பின்படி டெண்டர் ஜூன் 2025 இல் முடிவடைய வேண்டும் என்றும் கூறினார்.
"கடுமையான சட்டவிரோதங்களை சுட்டிக்காட்டிய போதிலும், ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், இழந்த பணத்தை மீட்டெடுக்கவும், ஒப்பந்ததாரர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்கவும், பெரிய அளவிலான ஊழலுக்கு வழிவகுத்த சட்டவிரோத மற்றும் கூட்டு ஏலத்தில் ஈடுபட்ட பொறுப்பான அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அந்த மனு சுட்டிக்காட்டியது.
சூன் 2025 இறுதிக்குள் ஊழல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மேலும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பெயரை 'தமிழ்நாடு கிறிஸ்டி சப்ளைஸ் கார்ப்பரேஷன்' (சட்டவிரோத ஒப்பந்தங்களால் ஆதாயம் அடைந்ததாகக் கூறப்படும் நிறுவனங்களில் ஒன்றின் பெயரால்) என மாற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு கிண்டலாக பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ரேஷன் துறையில் ரூபாய் 992 கோடி அளவிற்கு நடைபெற்று வரும் நெல் போக்குவரத்து ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் மார்ச் 2025 இல் லஞ்ச ஒழிப்புத்துறை முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் புகார் எழுப்பி இருந்தோம். இன்றைய தினம் அறப்போர் இயக்கம் மேலும் ஒரு கூடுதல் ஆதாரத்தோடு முதல்வர் மற்றும் இதர அதிகாரிகளுக்கு கூடுதல் புகார் அளித்துள்ளோம். ஜூன் 30, 2025 க்குள் இந்த ஊழல் டெண்டர் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி உள்ளோம். இதன் மூலமாக ஊழலில் 400 முதல் 500 கோடி ரூபாய் இழக்காமல் நம் வரி பணத்தை காப்பாற்றலாம்.
ஜூன் 2025-க்குள் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு அரசு கொண்டுவராவிட்டால் அறப்போர் இயக்கம் ஜூலை மாதம் முதல் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் என்னும் பெயரை தமிழ்நாடு கிறிஸ்டி சப்ளைஸ் கார்ப்பரேஷன் என்று மாற்ற உள்ளோம். ஜூலை 7, 2025-ல் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்பரேஷன் தன் பெயரை மாற்ற ஏதுவாக தமிழ்நாடு கிறிஸ்டி சப்ளை கார்ப்பரேஷன் என்னும் பெயர் பலகையை அச்சிட்டு அறப்போர் இயக்கம் அதன் நிர்வாக இயக்குனருக்கு நேரில் சென்று பரிசாக வழங்க உள்ளது. ஜூலை 2025 முதல் இந்த கார்பரேஷனில் உள்ள ஊழல் அதிகாரிகள் அனைவரும் கிம்பளத்திற்கு பதில் நேரடியாக கிறிஸ்டி நிறுவனத்திடமே தங்கள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளட்டும். அரசு நம் வரி பணத்தை கொடுத்து வீணடிக்க வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.