சென்னை வடபழனி கோவிலுக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, பா.ஜ.க., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி, இளையராஜா மற்றும் வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் சிலர், முறைகேடாக பதிவு செய்துள்ளதாக, ‘அறப்போர் இயக்கம்’ குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை வடபழனி கோவிலுக்கு சொந்தமான இந்த நிலம் விருகம்பாக்கத்தில் இருந்தாலும், முற்றிலும் தொடர்பில்லாத திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மோசடி ஆவணங்களை அரசு ரத்து செய்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து குற்றத்தை விசாரிக்க வேண்டும். என்று ஊழல் தடுப்பு இயக்கமான அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும் நிலத்தை வாங்கியவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கூட்டு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் சந்தேகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: மகன் என்பதால் தவறுகள் தெரிவதில்லையா? மு.க. ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி
புகார்தாரரான அறப்போர் இயக்கம் கூறுகையில், 1946-ல் இறந்ததாகக் கூறப்படும் முறையான உரிமையாளரான குலாப் தாஸ் நாராயண் தாஸின் சட்டப்பூர்வ வாரிசான ஜெயேந்திர வோராவுக்கு பவர் ஆஃப் அட்டர்னி என்று கூறி இளையராஜா இந்த பதிவு நடவடிக்கையை செய்துள்ளார்.
ஆற்காடு சாலையில் உள்ள 1.3 ஏக்கர் நிலத்திற்கான விற்பனை ஒப்பந்தம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில், பா.ஜ.க.,வின் இளைஞரணியில் உள்ள நயினார் பாலாஜிக்கும், இளையராஜாவுக்கும் இடையே, 2022 ஜூலை 23ல் பதிவு செய்யப்பட்டது.
சுந்தர மகாலிங்கம், வசந்தா பெயரில் நில ஆவணங்கள் இருப்பதால், ராதாபுரம் சப்-ரிஜிஸ்ட்ரார் பதிவை மேற்கொள்ளக் கூடாது. அதுமட்டுமின்றி, சென்னை சொத்து வேறு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது பதிவுச் சட்டம் பிரிவு 28-ஐ மீறுகிறது.
விருகம்பாக்கம் சார் பதிவாளர் ராதாபுரம் அதிகாரியிடம் தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட நிலத்தின் சர்வே எண்ணை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்த சேர்க்கபட்டுள்ளதாக கூறியுள்ளார். மெட்ரோ ரயில் நிறுவனம், நிலத்தை கையகப்படுத்துவதாக இருந்தால், துணை பதிவாளர்கள் பதிவு செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்ய தவறிவிட்டனர், என்று அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.
இதையடுத்து சுந்தர மகாலிங்கம் மற்றும் வசந்தா ஆகியோரின் பட்டாவை குலாப் தாஸ் நாராயண் தாஸ் என வருவாய்த்துறை மாற்றியதாக அறப்போர் இயக்கம் கூறுகிறது. மேலும், இறந்தவரின் பெயருக்கு பட்டாவை மாற்ற முழுமையான விசாரணை தேவை, அவரது இறப்புச் சான்றிதழிலும் சில முரண்பாடுகள் உள்ளன, என்றும் அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.
அதேநேரம் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கூறிய நயினார் பாலாஜி, இந்த நிலம் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டது என்பதை நிரூபிக்க உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தும் உள்ளது. அனைத்து ஆவணங்களையும் பகிரங்கமாக சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன். இது எனது பெயரைக் கெடுக்கும் முயற்சியாக உணர்கிறேன். அறப்போர் இயக்கம் மிகவும் உண்மையான அமைப்பாகக் கருதப்படுகிறது, அவர்கள் முறையாக விசாரித்து அறிக்கை வெளியிட வேண்டும், என்று கூறினார்.
இதனிடையே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மற்றொரு நிலத்தை அபகரித்ததிலும் இளையராஜாவுக்கு தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ மகன் நயினார் பாலாஜி, பத்திரப்பதிவில் முறைகேட்டில் ஈடுபடவில்லை. தவறாக தகவல்களை பரப்புகிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீதும் தந்தை மீதும் அவதூறு பரப்பும் விதமாக ஒரு சிலர் கைக்கூலியாக செயல்படுகிறார்கள். பொய் புகார் கூறிய அறப்போர் இயக்கம் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil