நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னையில் அறப்போர் இயக்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
நிலக்கரி இறக்குமதி ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். கடந்த 2012 -16ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தோனேஷியாவில் இருந்து 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியை டான் ஜெட்கோ இறக்குமதி செய்தது. நிலக்கரிக்கு அதிக விலை கொடுத்ததன் மூலம் அரசுக்கு 2177 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது குறித்தும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த கோரியும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மார்ச் 4ம் தேதி போராட்டம் நடத்த காவல் ஆணையரிடம் அனுமதி கோரப்பட்டது.
நிலக்கரி ஊழல் குறித்து சி பி ஐ விசாரித்து வருவதாகவும், லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறி போராட்டத்துக்கு அனுமதி மறுத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 4ம் தேதி போராட்டம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.
நீதிமன்ற அனுமதியுடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அறப்போர் இயக்கம் சார்பில் போராட்டம் நடந்தது, இதில் அந்த இயக்கத்தின் நிர்வாகி ஜெயராம் வெங்கடேசன் உள்பட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இணையதளங்கள் மூலமாகவே இந்தப் போராட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதை ஏற்று அரசியலுக்கு அப்பாற்பட்ட இளைஞர்கள் பெருமளவில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் வள்ளுவர் கோட்டம் ஏரியா பரபரப்பாக இருந்தது. மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக நடவடிக்கைக்கு உத்தரவிடாவிட்டால், அடுத்தகட்ட போராட்டத்தை தொடர இருப்பதாக அறப்போர் இயக்க நிர்வாகிகள் கூறினர்.