உணவுத்துறையில், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக ஒப்பந்தத்தில், ரூ992 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அறப்போர் இயக்கம், இந்த ஊழிலில் மத்திய மாநில அரசு பொது ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது குறித்து பல துறைகளில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறப்போர் இயக்கத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், கடந்த 2024 ஜூன் மாதம் ரேஷன் துறையில் நடைபெற்ற போக்குவரத்து டெண்டரில் சந்தை மதிப்பை விட 107 சதவீதம், அதிகமான தொகைக்கு டெண்டர் வழங்கியதன் மூலம் ரூ 992 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. இந்த டெண்டர் வழங்குவதற்காக மத்திய மற்றும் மாநில அரசு பொது ஊழியர்கள் பல சட்டங்களை உடைத்தும், வளைத்தும் வேலை செய்துள்ளார்கள்.
குறிப்பாக இந்த டெண்டரில், அனுபவம் உள்ள ஓட்டுனர்கள், கலந்துகொள்ள முடியாது. அனுபவம் இல்லாதவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் விதிகள் வரையெறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த 40 பக்க புகார் மற்றும் 565 பக்க ஆதாரங்களை அறப்போர் இயக்கம் சார்பில், சி.பி.ஐ, மாநில லஞ்ச ஒழிப்புத் துறை, அமலாக்கத்துறை, வருமான வரித் துறை, முதல்வர் ஸ்டாலின், மத்திய மற்றும் மாநில உணவுத்துறை அமைச்சர்கள், உணவுத்துறை செயலர்கள், உணவு ஆணையக இயக்குனர், மாநில நிதித்துறை செயலர் என அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லை நேரடி கொள்முதல் மையத்தில் அரசு கொள்முதல் செய்த பின்னர், அந்த செல்லை, சேமிப்பு மையத்திற்கு அனுப்பவும், மற்ற மாவட்டங்களுக்கு அனுப்ப ரயிலுக்கு எடுத்துச்செல்லவும், பின்பு நெல்லை அரிசியாக மாற்றி அதனை தாலுகா கொள்முதல் மையங்களுக்கு எடுத்துச் செல்லவும் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம், ரேஷன் துறை போக்குவரத்து 38 மாவட்டங்களுக்கும் சேர்த்து டெண்டர் விட்டது.
இந்த டெண்டர்கள் முருகா என்டர்பிரைசஸ், கந்தசாமி அண்ட் கோ மற்றும் கார்த்திகேயா என்டர்ப்ரைசஸ் ஆகிய 3 நிறுவனங்களுக்கு மட்டும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு உள்ளது. முதல் 8 கி.மீ.க்கு 1 மெட்ரிக் டன் நெல்லை ஒரு பயணத்திற்கு போக்குவரத்து செய்ய, டெண்டரின் பட்டியல் மதிப்பான ரூ.288ஐ விட ரூ.310 அதிக விலையில் ரூ.598க்கு கிறிஸ்டியின் பினாமி நிறுவனங்களாக அறியப்படும் முருகா என்டர்ப்ரைஸ்ஸ், கந்தசாமி அண்ட் கோ மற்றும் கார்த்திகேயா என்டர்ப்ரைஸ்ஸ் ஆகியவற்றிற்கு டெண்டர் வழங்கியது.
அதுவும் சந்தை மதிப்பை விட 107 சதவீதம், அதிகமான விலையில் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி அளவில் இழப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளது. இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.