/tamil-ie/media/media_files/uploads/2022/07/airport-2.jpg)
Arappor Iyakkam complaints Parandur land registered illegally to increase guideline value: பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில், வழிகாட்டி மதிப்பை உயர்த்தி, தனியார் நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில், ஏக்கருக்குப் பதிலாக சதுர அடியில் 73 ஏக்கர் நிலத்தை பதிவுத்துறை பதிவு செய்துள்ளதாக, அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சென்னையில் இரண்டாவது புதிய சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது. இந்தநிலையில், பரந்தூரில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் வகையில் 73 ஏக்கர் நிலம் ஏக்கர் அளவீட்டுக்குப் பதிலாக, சதுர அடியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு இயக்கமான அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: கோவையில் கஞ்சா விற்பனை செய்த 5 தனியார் கல்லூரி மாணவர்கள் கைது
இதுகுறித்து தலைமைச் செயலாளர் வி.இறையன்பு, வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகம் ஆகியோரிடம் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரில், பரந்தூர் மற்றும் நெல்வாய் கிராமங்களில் உள்ள தனியார் பட்டு நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களின் நில பத்திரங்கள் மார்ச் 2020 இல் காஞ்சிபுரம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வழங்கப்பட்டது.
ஆனால் இந்த ஆவணங்கள் தொடர்பாக சார் பதிவாளர் ஆர்.பிரகாஷ் பல்வேறு பிரச்னைகளை எழுப்பினார். மேலும், கிராம வரைபடம், சுங்கச்சான்றிதழ்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சர்வே எண்கள் இன்னும் ஏக்கர் கணக்கில் உள்ளன. பசுமை விமான நிலையத் திட்டம் கருத்தியல் நிலையில் இருந்ததாலும், பதிவுக்காக வழங்கப்பட்ட பத்திரங்கள், பல சர்வே எண்களில் உள்ள பெரிய அளவிலான நிலத்தை சதுர அடியாக மாற்றி இழப்பீட்டு தொகையை அதிகமாக பெற பத்திரங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது என சார் பதிவாளர் கூறியுள்ளார்.
மேலும், ஏக்கரில் உள்ள வழிகாட்டி மதிப்பை விட சதுர அடியில் வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருப்பதால், பதிவு செய்வதால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும், சார் பதிவாளர் எச்சரித்துள்ளார் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பதிவுத் துறை கூடுதல் ஐ.ஜி., கே.வி.சீனிவாசன், அந்த நிலத்தை, தனி மனைகளாகக் கருதி, வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்து, பதிவு செய்து, பதிவு செய்த பின், மனுதாரரிடம் உடனடியாக வழங்கும்படி, கடிதம் எழுதினார். இதற்கிடையில், சார் பதிவாளர் ஆர்.பிரகாஷ் மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக ராஜதுரை என்ற சார் பதிவாளர் கொண்டுவரப்பட்டார். அவர் நான்கு ஆவணங்களையும் ஜூலை 2020 இல் பதிவு செய்தார், என்று அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் கூறினார்.
கிராமத்தில் ஒரு ஏக்கருக்கு வழிகாட்டி மதிப்பு ரூ. 8.71 லட்சம், ஆனால் 49.5 சென்ட் நிலம் சதுர அடியில் ரூ. 32.40 லட்சம். அதாவது 1 ஏக்கர் அல்லது 43560 சதுர அடியின் வழிகாட்டி மதிப்பு ரூ.65.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பதிவுத் துறையின் மோசடி மற்றும் கையாடல் மூலம் நிலத்தின் மதிப்பு ரூ.8.71 லட்சத்தில் இருந்து ரூ.65.45 லட்சமாக அதிகரித்துள்ளது, இது நிலம் கையப்படுத்தும் நேரத்தில் கருவூலத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். அதாவது அரசு 73 ஏக்கருக்கு இழப்பீடாக ரூ.191 கோடி செலுத்த வேண்டும் என புகார் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, பதிவு செய்த அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், பதிவை ரத்து செய்யவும் அறப்போர் இயக்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.