லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் அறப்போர் இயக்கம் ஒரு புதிய முயற்சியாக, தமிழ்நாடு அரசின் 60க்கும் மேற்பட்ட துறைகளில் வெளியிடப்பட்ட 36,000 டெண்டர்களைப் பற்றிய ஆவணங்களை சேகரித்து இணையதளத்தையும் ‘ஆப்’பையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், டெண்டர் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சியில் பல கோடி ரூபாய்க்கான டெண்டர் ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம்தான் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்னும் நடந்துவருகிறது.
லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் அறப்போர் இயக்கம் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அறப்போர் தன்னார்வலர்கள் இதுவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் www.tntenders.gov.in என்ற வலைதளத்தில் அரசின் 60-க்கும் மேற்பட்ட துறைகளால் விடப்பட்ட 36,000 டெண்டர் ஆவணங்களைச் சேகரித்துள்ளனர். அவற்றை, http://tntenders.arappor.org என்ற இணையதளத்திலும் ‘ஆப்’பிலும் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த ஆவணங்கள் மூலம் தங்கள் பகுதியில் நடைபெறும் டெண்டர் பணிகளைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொண்டு அந்த பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்கலாம் என்று அறப்போர் இயக்கத்தினர் கூறுகின்றனர்.
இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “மக்கள் தங்கள் பகுதியில் செய்யும் அரசு வேலைகள் பற்றிய விவரங்களை அறப்போர் இணையதளத்தில் காணலாம். http://tntenders.arappor.org உங்கள் ஊர் பெயரை keyword இல் search செய்தால் உங்கள் ஊரில் அனைத்து துறைகளிலும் போடப்பட்டுள்ள டெண்டர் விவரங்கள் வரும்.அரசு வேலைகளை கண்காணிப்போம். ஊழலை தடுப்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த ஆவணங்களை எப்படி பார்ப்பது என்று விளக்கி வீடியோவும் வெளியிட்டுள்ளனர். “Arappor Tender website/ APP Launched http://tntenders.arappor.org - உங்கள் பகுதியில் நடக்கும் அரசு வேலை பற்றிய டெண்டர் ஆவணங்கள்/விவரங்கள் இங்கே பார்க்கலாம்.அரசு ஒளித்து வைத்திருக்கும் 36000 டெண்டர் ஆவணங்கள் இங்கே. விளக்கத்தை இந்த வீடியோவில் காணலாம்” என்று வீடியோ இணைப்பையும் வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு www.tntenders.gov.in என்ற வலைதளத்தில் டெண்டர் ஆவணங்களை https://tntenders.arappor.org/ என்ற தளத்தின் மூலமும், அறப்போர் செயலி மூலமும் உங்கள் இடங்களில் நடக்கும் பொதுப்பணிகளின் டெண்டர் ஆவண விவரங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம் என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்களில் உள்ள விவரங்களைக் க்கொண்டு அரசாங்கப் பணிகளை கேள்வி கேட்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் இது உதவும் என நம்புகிறோம் என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. இந்தச் செயலியைக் கூகுள் ப்ளேஸ்டோரில் (Google Playstore) `ARAPPOR' என்று தேடி பதிவிறக்கச்செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் டெண்டர் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக அறப்போர் இயக்கம் தொடங்கியுள்ள வலைதளத்தில் கூறியிருப்பதாவது: “குடிமக்களாக நாம் சாலை போடுவது, மழை நீர் வடிகால் அமைப்பது, நீர்நிலைகளை மீட்டல், கேபில்கள் அமைப்பது, சுகாதார மற்றும் கல்வி நிலையங்கள் அமைப்பது போன்ற பல அரசு பொதுப்பணிகளை எதிர்கொள்கிறோம். எனினும் இப்பணிகள் எல்லாம் டெண்டரில் குறிப்பிட்டுள்ள விதிகள் மற்றும் விவரங்கள் படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை நாம் கண்காணிக்க முதலில் நமக்கு அந்த டெண்டர்களின் விவரக்குறிப்புகள் என்னவென்று தெரிய வேண்டும்.
இன்று ஒரு குடிமகன் டெண்டர் விவரங்களை கண்டறிய வழியே இல்லை. ஏனெனில் டெண்டர் ஒப்பந்தபுள்ளி விண்ணப்பிக்கும் இறுதி தேதி முடிந்த கையோடு டெண்டர் வலைதளத்திலிருந்து டெண்டர் ஆவணங்கள் அனைத்தையும் அரசாங்கம் நீக்கி விடுகிறது. வலைதள ஆவணகிடங்கு (Archive) இணைப்பையும் அரசு முடக்கி விடுகிறது. எனவே குடிமகன் அரசாங்கத்தின் நிர்வாக முறைகேடு மற்றும் ஊழலைக் கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே, வேண்டும் என்றே இப்படி செய்யப்படுகிறது. பொறுப்புடைமைக்கும், அரசு திட்டங்களுக்கும் செய்யப்படும் செலவில் தரத்தை உறுதி செய்யவும், மற்றும் ஊழலை குறைக்கவும் தகவல் மற்றும் வெளிப்படைத்தன்மையுமே முக்கிய அம்சங்கள் ஆகும்
இதற்கான வழியை ஏற்படுத்த, தன்னார்வலர்கள் முயற்சியோடு தமிழ்நாடு அரசு www.tntenders.gov.in வலைதளத்தில் வெளியிடும் அனைத்து ஒப்பந்த ஆவணங்களையும் சேகரித்து வைக்க அறப்போர் இயக்கம் வழி செய்துள்ளது. இந்த தளத்தின் மூலம் உங்கள் அனைவரிடமும் உங்கள் இடங்களில் நடக்கும் பொதுப்பணிகளின் டெண்டர் ஆவண விவரங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம். அரசாங்கப் பணிகளை கேள்வி கேட்கவும் அதன் தரத்தை மேம்படுத்தவும் இந்தக்கருவி உதவும் என நம்புகிறோம். மேலும் இது போன்ற முறையை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு இணையத்திலும் டெண்டர் வழங்கும் இடத்திலும் டெண்டர் ஆவணம் மற்றும் குறிப்புகளை மக்களுக்கு கிடைக்க செய்ய வழி செய்ய வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் டெண்டர் விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், தமிழக அரசு டெண்டர் ஆவணங்களை இனி எங்கும் தேட வேண்டாம், அறப்போர் இயக்கம் உருவாக்கியுள்ள வலைதளத்திலும் ‘ஆப்’பிலும் மொத்தமாக காட்சிப் படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.