பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியை, தனியாரிடம் பதிவு செய்ததாகக் கூறப்படும் பதிவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஊழல் தடுப்பு அமைப்பான அறப்போர் இயக்கம் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் புகார் அளித்தது.
இந்த புகாரில்,1990 மற்றும் 2014 க்கு இடையில், சதுப்பு நிலம் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் துணை பதிவாளர்களால் மற்றவர்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.
“புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான அதிகாரிகள் உயர் பதவிகளை அடைந்துள்ளனர். அதில் ஒரு அதிகாரி 2004ல், 66 ஏக்கர் சதுப்பு நிலத்தை அறக்கட்டளையின் பெயரில் பதிவு செய்தார். ஆனால் அந்த அதிகாரியின் பெயரை விட்டுவிட்டு மற்றவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தற்போது, அந்த அதிகாரி, உயர் பதவியில் இருப்பதாக, அறப்போர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்தார்.
மேலும் 2007ம் ஆண்டு 1,700 ஏக்கர் சதுப்பு நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் புகார் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வனத்துறையிடம் நிலம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் 10க்கும் மேற்பட்ட பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
சதுப்பு நிலம் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, பதிவு செய்யப்பட்ட அனைத்து சர்வே எண்களும் தடைக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. “இது சதுப்பு நிலத்தை பதிவு செய்ததில் முறைகேடு என்பதை நிரூபிக்கிறது. இருப்பினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார்.
இந்த முறைகேடு குறித்து, அதிகாரிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யவும், அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்கவும் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரக அதிகாரிகளை அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “