Advertisment

ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் போலியாக பணியாற்றும் 353 பேராசிரியர்கள்: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக போலியாக பணிபுரிவதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

author-image
WebDesk
New Update
Anna university

Anna University

ஒரு கல்லூரியின் முழுநேர பேராசிரியர், ஒரே நேரத்தில் மற்றொரு கல்லூரியில் முழுநேர பேராசியராக பணிபுரிய முடியாது. அப்படி பணிபுரிந்தால் மோசடி என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் கூறுகிறது. கவுரவப் பேராசிரியராக இருந்தால்கூட 2 கல்லூரிகளில் மட்டுமே பணிபுரிய முடியும்.

Advertisment

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக போலியாக பணிபுரிவதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அறப்போர் இயக்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது; ‘தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 480 கல்லூரிகள் இயங்கி வருகின்றன

இதில், திங்கள் கிழமை 9 கல்லூரிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2023-24 கல்வி ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் அங்கு பணிபுரியும் பேராசிரியர் விவரங்களை ஆய்வு செய்ததில், 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிவது போன்று போலியாக கணக்கு காட்டப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் என்ற பகுதியில் ஒவ்வொரு கல்லூரியிலும் பணிபுரியும் பேராசிரியர்களின் விவரங்களைக் காணலாம்.

அவர்களில் 175 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த முறைகேட்டால் மாணவர்களுக்கு தரமான பொறியியல் கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது

இதுதொடர்பாக 2023-24ல் குழுவை ஏற்படுத்தி ஆய்வை மேற்கொண்ட அப்போதைய இணைப்பு அங்கீகாரம் வழங்கும் மையத்தின் இயக்குநர் இளையபெருமாள், ஆய்வுக் கமிட்டியின் உறுப்பினர்கள், 224 கல்லூரி நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்.

இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், செயலர் லட்சுமிநாராயண் மிஸ்ரா, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் தலைவர் சீதாராம் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நினைத்தால் இந்த முறைகேட்டை ஒரே வாரத்தில் உறுதிப்படுத்தி சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரே வாரத்தில் மீண்டும் ஆய்வு செய்து தரமான கல்லூரிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த 353 பேராசிரியர்களையும் விசாரித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்று அவர்கள் தெரிவித்தனர்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment