டாஸ்மாக் பாக்ஸ் இ டெண்டரில் முறைகேடு நடப்பதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கேள்விகளை எழுப்பி அறப்போர் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், மாநிலம் முழுவதிலும் 41 டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான டெண்டரின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.96 கோடி மட்டுமே. அறப்போர் இயக்கம் சொல்வது போல ரூ.1000 கோடி இல்லை. இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு தவிர்த்து பிற மாவட்டங்களில் டெண்டர் கோரப்பட்டது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டின் புலம்பெயர்ந்தோர் கதை: தலைமைச் செயலகம் கட்ட உதவிய தொழிலாளர்களுக்கு விழா நடத்திய கருணாநிதி
இந்த டெண்டரைப் பொறுத்தவரையிலும் டாஸ்மாக் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைதான் இப்பொழுதும் வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. அரைகுறையான - உண்மைக்குப் புறம்பான தகவல்களை விவரங்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டு இருக்கிறது.
முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தால் அதனை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களிடம் அவப்பெயரை உண்டாக்க முயற்சி செய்ததற்காக அறப்போர் இயக்கம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனப் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், அமைச்சரின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அறப்போர் இயக்கம் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
முந்தைய ஆட்சியில் இருந்த டெண்டர் முறையை தான் பின்பற்றுகிறோம் என்று கூறினீர்கள்:
முந்தைய ஆட்சியில் பாக்ஸ் டெண்டர்களால் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை உங்கள் தலைவர் நம் முதலமைச்சர் சுட்டி காட்டி உள்ளார். இதை எல்லாம் மாற்றுவீர்கள் என்று தான் மக்கள் உங்களுக்கு வாக்கு அளித்து ஆட்சிக்கு வந்தார்கள். இ டெண்டர் முறைகளில், வெளிப்படைத்தன்மையை அமல்படுத்துவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிறகு முந்தைய ஆட்சி முறையை தான் பின்பற்றுகிறேன் என்பது அதே வெளிப்படைத்தன்மை இல்லாத முறைகளை தான் பின்பற்றுகிறீர்கள் என்பது தான் அர்த்தம்.
இ டெண்டர்களில் யார் என்ன ஆவணங்கள் சமர்பித்தார்கள் என்பது NIC சர்வரில் இருக்கும். ஏமாற்றுவது கடினம். அதே போல் இ டெண்டரில் யார் போட்டி போட்டார்கள், என்ன விலை கொடுத்தார்கள், யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்று அனைத்தும் மக்கள் பார்க்க முடியும். இப்படி செய்தால் தான் வெளிப்படைத்தன்மை. பாக்ஸ் டெண்டரில் இந்த டெண்டர்கள் ஓபன் செய்துவிட்டு யார் போட்டியாளர்கள் என்று ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் கூறி விட்டு பிறகு அவர்களையும் அனுப்பி விட்டு, ஒரு ஆவணத்தை ஒரு அதிகாரி நினைத்தால் உருவி தேவையானவர்களுக்கு டெண்டர் கொடுக்க வாய்ப்பு உள்ளது. இதுதான் பாக்ஸ் டெண்டர் முறை. இதில் வெளிப்படைத்தன்மை உள்ளது என்று நீங்கள் கூறுவது வேடிக்கை. டெண்டர் ஓபன் செய்து 24 மணி நேரம் ஆகியும் கூட எங்கள் யாருக்கும் யார் போட்டியாளர்கள் என்று கூட தெரியாது. எனவே ஊழலுக்கு வழிவகை செய்யும் வெளிப்படைத்தன்மை இல்லாத இம்முறை தான் பாக்ஸ் டெண்டர்.
இ டெண்டர் முறையில் ஒருவருக்கு தான் டெண்டர் கொடுக்க முடியும் என்றீர்கள்:
பாக்ஸ் டெண்டர் முறையில் 43 டெண்டர்கள் போட்டுள்ளோம். இ டெண்டரில் ஒருவருக்கு மட்டுமே அறப்போர் இயக்கம் டெண்டர் கொடுக்க சொல்கிறோமா என்றும் ஒரு பெரு முதலாளி தான் எடுக்க முடியும் என்பதும் பேட்டியில் நீங்கள் கூறி இருந்தீர்கள். இது ஒரு முழு பூசணிக்காயை மறைக்க நினைக்கும் செயல். 43 இ டெண்டர்கள் போட முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா? ஏன்...சிறு ஒப்பந்ததாரர்கள் மீது கரிசனம் இருந்தால் நீங்கள் 150 இ டெண்டர்களாக போட்டு கூட 3 லாரிகள் வைத்துள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 10 முதல் 20 வரை லாரி வைத்திருக்க வேண்டும் என்று கேட்கத் தேவையில்லை. எனவே பாக்ஸ் டெண்டர் சிறு ஒப்பந்ததாரர்களுக்கு உதவும். இ டெண்டர் பெரிய முதலாளிக்கு தான் உதவும் என்பதே ஒரு மிகப் பெரிய பொய். நீங்கள் கூறியது ஊழலுக்கு வழிவகை செய்யும் பாக்ஸ் டெண்டரை தொடர்ந்து செயல்படுத்தவும் இ டெண்டரை செயல்படுத்தாமல் இருக்கவும் கட்டமைக்கப்படும் வதந்தி.
டெண்டர் மதிப்பு ஆண்டுக்கு ரூ 96 கோடி மட்டுமே, அறப்போர் கூறியது போல் ரூ 1000 கோடி அளவிற்கு இல்லை என்றீர்கள்.
இந்த அனைத்து டெண்டர்களும் 3 ஆண்டுகளுக்கானது. உங்கள் கணக்கு படி ஆண்டுக்கு ரூ 96 கோடி என்றால், 3 ஆண்டுகளுக்கு (டெண்டரில் உள்ளது போல் ஆண்டிற்கு 8% அதிகப்படி சேர்த்து) ரூ 312 கோடி டெண்டர் மதிப்பாகிறது. நாங்கள் கூறியது போல் ரூ 1000 கோடி இல்லை ரூ 312 கோடிதான் என்பது சரிதானா?
உதாரணத்திற்கு காஞ்சிபுரம் வடக்கு (திருமழிசை அலகு III) எடுத்து கொள்வோம். உங்கள் டெண்டர் படி அதன் மதிப்பு 4 கோடி. சாதாரண நாட்களில் 12000 கேசுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் ஒரு வருடத்திற்கு 43.8 லட்சம் கேசுகள். இந்த பகுதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து டெண்டரில் வழங்கப்பட்ட டாஸ்மாக் விலை ஆணை ஒரு கேசுக்கு ரூ 16.75. இதே விலையை இன்றைய தேதியில் போட்டால் கூட 43.8 லட்சம் கேசுகளுக்கு முதலாம் ஆண்டு ரூ 7.33 கோடியும், இரண்டாம் ஆண்டு ரூ 7.92 கோடியும் (8% டெண்டரில் குறிப்பிட்டுள்ள விலை உயர்வு) மூன்றாம் ஆண்டில் ரூ 8.55 கோடியும் டெண்டர் மதிப்பு ஆகிறது. மொத்தம் 3 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ 23.8 கோடி டெண்டர் மதிப்பு ஆகிறது. ஆனால் இதை வெறும் ஆண்டிற்கு ரூ 4 கோடி என்று டெண்டர் மதிப்பில் எப்படி போட்டீர்கள் என்பதன் விளக்கம் கூட டெண்டர் ஆவணத்தில் இல்லை. மேலும் இது குறைந்தபட்ச கணக்கீடு மட்டுமே. பண்டிகை நாள் மற்றும் வார இறுதியில் போக்குவரத்து செய்யப்படும் அதிகமான கேசுகளையும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ரூ. 16.75ன் இன்றைய விலையை ஆண்டுக்கு 8% அதிகரித்து எடுத்தால் இது மேலும் அதிகமாகும்.
சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மற்ற டெண்டர்களை ஆய்வு செய்ததில் இது போன்று தான் இருப்பதை காண முடிகிறது. நீங்கள் சொல்வது போல் ரூ 4 கோடி டெண்டர் மதிப்பு ஒரு வருடத்திற்கு என்று எடுத்துக்கொண்டால் காஞ்சிபுரம் வடக்கிற்கு ஒரு கேசுக்கு கிட்டத்தட்ட ரூ 9 தான் டெண்டர் தொகையாக வருகிறது. ஆனால் 2 வருடம் முன்னரே டாஸ்மாக் நிர்ணயித்த தொகை கேசுக்கு ரூ 16.75 ஆகும். எனவே கிட்டத்தட்ட ரூ 24 கோடி டெண்டரை TASMAC தனது மதிப்பீடு கணக்கில் மிகப்பெரிய அளவில் குறைத்து காட்டப்பட்டது தெரிகிறது.
மேலும் நம் நிதி அமைச்சர் PTR அவர்கள் கடந்த ஆண்டு பேசுகையில் மது விற்பனையில் 50% வரை விற்பனை கலால் வரிக்கு வெளியில் நடப்பதாக தெரிவித்துள்ளார். அதன் போக்குவரத்து கணக்கு என்ன? அவர் கூறும் கணக்கே இல்லாத இந்த விற்பனை எல்லாம் கணக்கில் கொண்டு வரப்படுமா?
மேலும் நாங்கள் எழுப்பிய முக்கிய பிரச்சனை இவ்வளவு அதிக மதிப்பு டெண்டர்களை இ டெண்டர்களாக போடாமல் ஊழலுக்கு வழிவகை செய்யும் வெளிப்படைத்தன்மை இல்லாத பாக்ஸ் டெண்டர்களாக போடுவதே!
மேலும் எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டி உள்ளீர்கள். இது போன்ற வழக்குகளின் பெயர் தான் SLAPP (Strategic Litigation Against Public Participation - பொது பங்கேற்பிற்கு எதிரான மூலோபாய வழக்கு). மக்கள் கேள்வி கேட்க கூடாது என்பதற்காக பேச்சுரிமை கருத்துரிமையை அடக்க வேண்டும் என்ற சர்வாதிகாரி போக்கு உள்ள ஒரு அரசு தான் இது போல் மக்கள் மீது வழக்கு தொடப்போம் என்று மிரட்டுவார்கள்.
உங்கள் அரசு பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு நிற்க வேண்டும். மாறாக ஊழலுக்கு வழிவகை செய்யும் பாக்ஸ் டெண்டர் கொள்கையை கேள்வி கேட்பவர்கள் மீது அவர்கள் கேள்வி கேட்காமல் செய்ய வழக்கு போடுவோம் என்பது தான் உங்கள் நிலைப்பாடாக உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் ஊழலில் இழக்காமல் இருக்க மக்களாகிய நாங்கள் கேள்விகளை எழுப்புவது அவசியமாக கருதுகிறோம். அப்படியே அதை அடக்க நீங்கள் SLAPP வழக்குகள் தொடுத்தாலும் அது நாங்கள் கேள்வி கேட்பதை நிறுத்தாது. எங்கள் கேள்விகள் தொடரும். பாக்ஸ் டெண்டர்களை ரத்து செய்யுங்கள். இ டெண்டர்களை கொண்டு வாருங்கள்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.