அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் உணவின் தரமும் சரியில்லை, விலையும் அதிகம். அந்த காரணத்தினால் தான் மக்கள் அங்கே சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் அத்தியாவசிய தேவையான கழிவறை வசதி இலவசமாக கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால், நெடுஞ்சாலை உணவக உரிமையாளர்கள் மற்றும் ப்ரோக்கர்கள் கோரிக்கையை ஏற்று கழிவறைக்கு கட்டணம் வசூல் செய்ய விதிகளை திருத்தி, அமைச்சர் சிவசங்கர் மற்றும் MD இளங்கோவன் அறிவித்தனர்.
அதற்கு ஒரு வேடிக்கையான காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்.
யாருமே இந்த உணவகங்களில் சாப்பிடுவதில்லை. ஆகவே கழிவறை காசு வாங்கி உணவக உரிமையாளர்கள் பிழைத்துக் கொள்ளட்டும் என்று 5 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளார்கள்.
கழிவறைக்கு கட்டணம் வாங்கி அப்படி என்ன சம்பாதிக்க போறாங்க என்று சிலர் கேட்கிறார்கள்.
குறைந்தபட்ச சராசரி கணக்கு போட்டாலே வருடத்திற்கு 63 கோடி ரூபாய் பணம் கழிவறை கட்டணம் என்ற பெயரில் அரசு பேருந்து பயணிகளிடம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இன்னும் பண்டிகை காலங்களில் அதிக பேருந்துகள் அதிக கூட்டத்துடன் செல்லும் போது கழிவறை கட்டணத்தை உயர்த்தி மேலும் பல கோடிகள் கொள்ளை அடிப்பார்கள்.
சரி இப்படி கொள்ளை அடித்த பிறகு சுகாதாரமான கழிவறை வசதி கிடைக்குமா?
தற்போது வரை சட்ட விரோதமாக 10 ரூபாய் வரை கழிவறை கட்டணம் வாங்கியும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து தர முடியாத உணவகங்கள், 5 ரூபாய் வாங்கினால் மட்டும் எப்படி சுகாதாரமான கழிவறை வசதி ஏற்படுத்தி தருவார்கள்..?
டெண்டர் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வைக்க முடியாமல் தோல்வி அடைந்த திமுக அரசாங்கம் மக்களிடம் காசு வாங்க அனுமதித்து உணவக கொள்ளையுடன் தற்போது கழிவறை கொள்ளை அடிக்க சட்ட அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.
மக்கள் பணம் கொடுக்க வேண்டும். ஆனால் உணவின் தரத்தையும், கழிவறை சுகாதாரத்தையும் அரசாங்கம் உறுதி செய்யாது.
இந்த டெண்டர் விதிகளை தற்பொழுது திருத்தவில்லை என்றால் பேருந்து பயணம் செய்பவர்களை மிரட்டி அசுத்தமான கழிவறைகளை பயன்படுத்த வைக்கவும் உணவக உரிமையாளர்கள் தயங்க மாட்டார்கள்.
எனவே பாமர மக்கள் பயணம் செய்யும் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் அத்தியாவசிய தேவையான கழிவறை வசதி இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்துக்கு அறப்போர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“