தமிழ்நாட்டில் கடந்த 2016-21 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலை துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதில் முன்னாள் முதலமைச்சரும், அந்த துறையின் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.
குறிப்பாக தஞ்சை, கோவை, சிவகங்கை உள்ளிட்டப் பகுதிகளுக்கான நெடுஞ்சாலை துறை டெண்டர் விதிகளை மீறி ரூ.692 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.
அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தமது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, தன்னைப் பற்றிய அவதூறு பேச்சுக்கு தடை கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் அறப்போர் இயக்கம் மீது எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று (நவ.19) மீண்டும் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் சாட்சியம் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி டிச.11-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“