/tamil-ie/media/media_files/uploads/2018/01/Ramachandran_Nagaswamy.jpg)
தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசுவாமிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர், வரலாற்று அறிஞர், கல்வெட்டு ஆய்வாளர் என பன்முகம் கொண்ட இவர், தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குநராவார்.
மேலும், ஆண்டுதோறும் சிதம்பரம் நடராசர் கோவிலில் நடக்கும் நாட்டியாஞ்சலி விழாவை கடந்த 1980-ஆம் ஆண்டில் துவங்கியவர்களுள் இவர் முதன்மையானவர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள பத்தூரில் 1972-ல் பூமிக்கடியில் இருந்து நடராஜர் சிலை உட்பட 10 ஐம்பொன் சிலைகள் எடுக்கப்பட்டன. இதில், நடராஜர் சிலை மட்டும் கடத்தப்பட்டு லண்டனில் இருந்த கனடா ஆர்ட் கேலரி உரிமையாளர் ஒருவரின் கைக்குப் போய்ச் சேர்ந்தது. இதையடுத்து, கடத்தல் கும்பல் எஞ்சிய ஒன்பது சிலைகளையும் திருட முயற்சித்தபோது, போலீஸ் பிடியில் சிக்கியது. எனினும், ஏற்கெனவே கடத்தப்பட்ட நடராஜர் சிலையை மீட்பதற்காக 1982-ல் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக ஸ்காட்லாந்து போலீஸும் அப்போது விசாரணை நடத்தியது.
அப்போது, தமிழக தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்த நாகசுவாமி, லண்டன் நீதிமன்றம் வரைக்கும் சென்று நிபுணர் சாட்சியம் அளித்தார்.
சேக்கிழாரின் பெரியபுராணம் குறித்த ஆய்வுக்காக கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.