சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பாண்டியன் கோட்டை எனும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்க காலத்திலிருந்து பாண்டியன் உக்கிரப்பெருவழுதி காலத்தைச் சேர்ந்த இந்த கோட்டை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இலக்கியங்களில் “கானப்பேர்” எனப் பெயர் பெற்ற இந்த இடம், புறநானூற்றின் 21-வது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றி மிகுந்த ஆழமும் அகலமும் கொண்ட அகழி இருந்ததாகவும், இங்கு உள்ள அரண் மிகுந்தது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/11832ab2-3fa.jpg)
சான்றுகள்
இந்தப் பகுதியில் அடர்த்தியான சீமைக் கருவேல மரங்கள் வளரும் நிலையில், மேற்பரப்பிலேயே சங்க காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள், செங்கற்கள், வட்ட வடிவச் சில்லுகள், எலும்பு மற்றும் மண் பொருட்கள் கிடைக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீராவிக் குளம் அருகே தோண்டிய போது, தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் "மோசிதபன்", "இம்கூட்டம்" போன்ற தமிழ் எழுத்துகளும் காணப்பட்டுள்ளன. இப்பகுதி 37 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாக உள்ளது.
கோரிக்கை
/indian-express-tamil/media/post_attachments/76ed86ac-d89.jpg)
இந்நிலையில், இந்த இடத்தை அகழாய்வு செய்ய தொல்லியல் ஆர்வலர்கள் தொடர்ந்து தமிழக அரசின் தொல்லியல் துறைக்கு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்த கோரிக்கையை பரிசீலித்து, முதலில் கள ஆய்வு மேற்கொண்டு, பின்னர் முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என அரசு தகவல் வழங்கியுள்ளது.
தொல்லியல் ஆர்வலர்கள், கீழடி போன்று பாண்டியன் கோட்டையும் தமிழ் நாகரிகத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் என்பதில் உறுதியுடன் உள்ளனர். எனவே, இந்த அகழாய்வு விரைவாக தொடங்க வேண்டும் என அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.