துரை தயாநிதி வீட்டில் விசேஷம்: ஸ்டாலின்- அழகிரி சந்திப்பு நடக்குமா?

அரசியலால் விலகி இருந்த மு.க.ஸ்டாலினும் – மு.க.அழகிரியும், துரை தயாநிதி வீட்டில் நடக்கும் குழந்தை பெயர் சூட்டுவிழாவிலோ அல்லது வெகு விரைவில் சந்திப்பார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

mk stalin, mk alagiri, முக அழகிரி, முக ஸ்டாலின், துரை தயாநிதி, ஸ்டாலின் அழகிரி சந்திப்பு, durai dayanidhi, dmk, mk stalin mk alagiri meet, cm mk stalin, alagiri

கிராமத்தில் ஒரு சொலவடை சொல்வார்கள், இரண்டு பேர் அல்லது இரண்டு குடும்பத்தினர் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து பேச்சு வார்த்தை இல்லமால் போய்விட்டா, அவர்கள் எப்போதுதான் சேர்வது என்ற கேள்வி எழும்போது, ‘ஒன்னு சாவுல கூடனும் இல்ல வாழ்வுல கூடனும்’ என்று சொல்வார்கள். அதாவது சண்டை போட்டவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிகழ்வில் சேர்ந்துதான் ஆகவேண்டும் என்பதுதான் அது.
அப்படி, திமுகவில் அரசியல் போட்டி காரணமாக விலகி இருந்த சகோதரர்கள் ஸ்டாலினும் அழகிரியும் தந்தை கருணாநிதி இறந்தப்போது பங்கேற்றார்கள். ஆனால், அவ்வளவு இணக்கம் ஏற்படவில்லை. ஆனால், இப்போது திமுக வெற்றி பெற்ற பிறகு, துரை தயாநிதி வீட்டு விசேஷதிலோ அல்லது சீக்கிரத்தில் அவர்கள் சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, மதுரையில் மு.க.ஸ்டாலினும் அவரது அண்ணன் மு.க.அழகிரியும் சந்திப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டதால் மதுரையே பரபரப்பானது. ஆனால், அந்த சந்திப்பு நடக்காமல் போனது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்தபோதே திமுகவில் தென்மண்டல பொறுப்பாளராக இருந்த அவருடைய மூத்த மகன் மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பிறகு இப்போது வரை அவர் திமுகவுக்கு வெளியேதான் இருக்கிறார்.

அவ்வப்போது, மு.க.அழகிரி திமுகவில் தனது அரசியல் போட்டியாளரான மு.க.ஸ்டாலினை விமர்சித்து வந்துள்ளார். முதல்வராகவே முடியாது என்றும் தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மு.க.அழகிரி அரசியலில் களம் இறங்க ரஜினியின் வரவை எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் கொரோனா பரவல் காரணமாக முடிவை மாற்றிக்கொண்டதால், தனது முடிவைக் கைவிட்டார். பாஜக தேர்தலில் திமுகவுக்கு எதிராக மு.க.அழகிரியை கையிலெடுக்க முயற்சி செய்தது என்றும் ஆனால் அழகிரி அப்படி செயல்படாமல் அமைதியாவிட்டார் என்றும் ஊடகங்களில் பேசப்பட்டது.

தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானபோது, மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்தார். அதோடு, முதல்வராகும் தனது தம்பியை நினைத்து பெருமைப்படுவதாகக் கூறினார். முதல்வர் பதவியேற்பு விழாவில், கொரோனா தொற்று காரணமாக மு.க.அழகிரி பங்கேற்கவில்லை. ஆனால், அவருடைய மகன் துரை தயாநிதியும் மகளும் கலந்துகொண்டனர். துரை தயாநிதியை ஸ்டாலின் மகன் உதயநிதி கட்டி அணைத்து வரவேற்ற நிகழ்வு தமிழக அரசியலில் கவனம் பெற்றது.

இந்த சூழலில்தான், கொரோனா ஆய்வு செய்ய மதுரை சென்ற மு.க.ஸ்டாலின், அங்கே தனது அண்ணன் மு.க.அழகிரியை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஸ்டாலின் மதுரை வந்தபோது மு.க.அழகிரி வீட்டுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அரசியலால் நீண்ட காலம் பிரிந்திருந்த சகோதரர்கள் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த சந்திப்பு நடக்கவே இல்லை. ஸ்டாலின் அரசு அலுவல் காரணமாக வந்துள்ளார், அதனால், தனிப்பட்ட சந்திப்புகளை நடத்த அவர் விரும்பாததால் தவிர்க்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, கருணாநிதியின் மகள் செல்வி, ஸ்டாலினையும் அழகிரியும் சேர்த்துவைக்கும் முயற்சியில் ஆரம்பத்தில் இருந்த அதே வேகத்தை இப்போதும் காட்டிவருகிறார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மு.க.அழகிரியும் முதல்வர் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினை சந்திக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த சந்திப்பு தள்ளிப் போகும் என்றும் எப்போது வேண்டுமானலும் நடக்கலாம் என்றும் இரண்டுவிதமாக பேசப்பட்டது.

இந்த சூழலில்தான், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், மு.க.அழகிரி வீட்டினர் சந்தோஷத்தில் உள்ளனராம். குடும்பத்தினர் குழந்தைக்கு மே 28ம் தேதி பெயர் சூட்டு விழா நடத்துகிறார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேரனுக்கு பெயர் சூட்டுவிழாவுக்காக மதுரையில் இருந்து சென்னை செல்லும் அழகிரி ஈஞ்சம்பாக்கம் பங்களாவில் தங்க உள்ளார்.

அதனால், துரை தயாநிதியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா விசேஷத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றால், அழகிரியுடனான சந்திப்பு நடக்கலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. அப்படி இந்த சந்திப்பு நடக்காவிட்டால், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி ஸ்டாலினும் அழகிரியும் சந்திப்பார்கள் என்கின்றனர். ஆனால், அதற்கு முன்னதாகவே மு.க.அழகிரி ஸ்டாலினை சந்திப்பார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, அரசியலில் பரபரப்புகள் எதுவும் இல்லை என்றாலும், தொற்று தணிந்தபின், பாஜக திமுகவை சட்டமன்றத்திலும் சட்டமன்றத்துக்கு வெளியேயும் கடுமையாக விமர்சித்து செயல்படுவார்கள். ஏனென்றால், தேர்தலுக்கு முன்னதாக, திமுகவில் இருந்து கு.க.செல்வம், வி.பி.துரைசாமி போன்றவர்களை பாஜக தன் பக்கம் இழுத்தது. அப்படி, இப்போது ஏதாவது நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், பாஜகவின் உத்திகளை எதிர்கொள்ள தென்மண்டலத்தில் மு.க.அழகிரியின் உதவி தேவை என்று திமுக தலைமை கருதுகிறதாம். ஸ்டாலினும் அழகிரியும் சந்தித்து இணைந்தால், அழகிரிக்கு திமுக தலைமை தென் மண்டல பொறுப்பை ஒதுக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலால் விலகி இருந்த மு.க.ஸ்டாலினும் – மு.க.அழகிரியும், துரை தயாநிதி வீட்டில் நடக்கும் குழந்தை பெயர் சூட்டுவிழாவிலோ அல்லது வெகு விரைவில் சந்திப்பார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Are meet mk stalin and mk alagiri in durai dayanidhi baby naming function

Next Story
வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: ஸ்டாலின் நடவடிக்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com