அறிஞர் அண்ணா பிறந்தநாள் : திமுக மற்றும் மதிமுக கொண்டாடும் முப்பெரும் விழா

தமிழகமெங்கும் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தி அவரின் 110வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது

அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா : அறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் இன்று. அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வண்ணம் ஒவ்வொரு கட்சியினரும் பல்வேறு இடங்களில் சிறப்புக் கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

திமுகவின் முப்பெரும் விழா

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா, பெரியாரின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக உதயமான நாள் என மூன்றையும் ஒன்றாய் கொண்டாடுவதே வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு இவ்விழாவினை விழுப்புரத்தில் சிறப்பாக கொண்டாட இருக்கிறது திமுக கட்சி.

இன்று மாலை விழுப்புரம் காமராஜ் நகராட்சிப் பள்ளி மைதானத்தில் இருக்கும் அண்ணா திடலில் 4 மணிக்கு விழா தொடங்க இருக்கிறது. இந்த விழாவினை தலைமை ஏற்று நடத்துகிறார் ஸ்டாலின். மேலும் இவ்விழாவில் கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கி பேச இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிமுகவின் முப்பெரும் விழா

திமுக கட்சினைப் போலவே மதிமுகவும் முப்பெரும் விழாவினை இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை சாலையில் இருக்கும் மூலக்கடையில் கொண்டாட இருக்கிறது. அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோவின் பொதுவாழ்வு பொன்விழா என மூன்று முக்கியமான நிகழ்வுகளை கொண்டாடும் விதமாக இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.

திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற இருக்கும் இம்மாநாட்டில் கருணாநிதியின் திரு உருவப்படத்தை திறந்து வைத்து பேச இருக்கிறார் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா.

இவ்விழாவில் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

இன்று மாலை காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் தலைமையில் பொதுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close