மத்திய பணியாளர் தேர்வாணையம், சென்ற 2019 செப்டம்பரில் நடத்திய சிவில் சர்வீசஸ் முக்கிய தேர்வு மற்றும் 2020 பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரையில் நடத்திய நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின், பட்டியலை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. மொத்தம் 829 தேர்வர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் சாதித்துக் காட்டினர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மாணவர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7-ஆவது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில், தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் கொள்ளு பேத்தி பெயரும் இடம் பெற்றுள்ளது. 23 வயதான பிரித்திகா ராணி தனது முதல் முயற்சியிலேயே, தேசிய அளவில் 171 இடத்தை பிடித்துள்ளார்.
முன்னதாக, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் UPSC தேர்வில் வெற்றி பெற்ற பிரித்திகா ராணி தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா போல் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் மென்மேலும் உயர வேண்டும் என வாழ்த்து மடல் எழுதினார்.
சிவில் சர்வில் தேர்வில், வினாத் தாள் இந்தியில் மட்டும் இருக்கக் கூடாது, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும் என்று அறிஞர் அண்ணாவின் கோரிக்கை 1960களில் இந்தி திணிப்பு போராட்டத்தை வலுப்பெற செய்தது.
அறிஞர் அண்ணாவின் கொள்ளு பேத்தியான பிரித்திகா ராணிக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. டிஜிபி சைலேந்திர பாபு இதுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil