Ariyalur collector and officers travel Govt bus taking ticket: அரியலூரில் அரசு சார்பில் நடைபெறும் விழாவுக்கு அரசு பேருந்தில் பயணச்சீட்டு பெற்று ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் பயணித்தது பரபரப்பாக பேசப்படுகின்றது. டீசல் செலவினை சிக்கனம் செய்ய மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்த புதிய நடவடிக்கையை பின்பற்றி அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் பேருந்தில் பயணித்தனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் கடம்பூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் இன்று (ஜூன் 08) காலை 11 மணிக்கு நடைபெற்றது.
இதற்காக ஆட்சியர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து முகாம் நடைபெறும் கிராமத்துக்கு ஒரே அரசு பேருந்தில் செல்ல ஆட்சியர் ரமண சரஸ்வதி ஏற்பாடு செய்திருந்தார். அதிலும் பேருந்தில் செல்லும் அனைத்து அலுவலர்களும் கட்டணம் ரூ.25 கொடுத்து பயணச்சீட்டு பெற்று சென்றனர்.
இதையும் படியுங்கள்: சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை அறநிலையத்துறைக்கு வழங்க தீட்சிதர்கள் மறுப்பு
அதேபோல் திரும்பி வருவதற்கும் ரூ.25 பயணச்சீட்டு பெற வேண்டும் என்பது கட்டாயம். அனைத்துத்துறை உயர் அலுவலர்களுக்கும் வாகனங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அனைத்து வாகனங்களும் முகாம் நடைபெறும் கிராமத்துக்கு சென்று வந்தால் டீசல் செலவு அதிகமாகும் என்பதால் ஒரே வாகனத்தில் அரசுப் பேருந்தில் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்டத்தின் ஆட்சியர் மட்டுமின்றி தனக்கு கீழே பணியாற்றும் அலுவலர்களையும் அரசு பேருந்தில் பயணிக்கச் செய்து துறை அலுவலர்களுடன் தானும் ஒரு பயணியாக பயணித்து அரசுப்பேருந்தில் இலவச பயணமின்றி டிக்கெட் எடுத்துச்சென்றது அப்பகுதியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகின்றது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil