நீட் தேர்வு அச்சத்தில் ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி அரசியலாக்கப்பட்ட நிலையில், நாளை நீட் தேர்வு எழுத இருந்த மாணவி இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
அரியலூர் நகரம் ரயில்வே காலனி தெருவை சேர்ந்தவர்கள் நடராஜன்-உமாராணி. நடராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் உமாராணி பிள்ளைகளை பார்த்துக்கொண்டு வீட்டில் உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள். மகள் நிஷாந்தி (16) 2020-21-ம் கல்வியாண்டில் +2 பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர் ஆகும் கனவில், நிஷாந்தினி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்காக கோச்சிங் சென்டருக்கு சென்று பயிற்சியும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நாளை நீட் தேர்வு எழுத எழுத இருந்த, நிஷாந்தி நேற்று இரவு தனது வீட்டில் உள்ள தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் நிஷாந்தி வெளியில் வராததால் சந்தேகமடைந்த அவரது தாய் அறையை திறந்து பார்த்த போது, அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் போலீஸார், விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.
மாணவி நிஷாந்தி கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்துள்ளார். தற்போது 2-வது முறையாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக மாணவி மன உலைச்சலில் இருந்ததாகவும், நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மாணவியின் இறப்பு குறித்து அரியலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நிஷாந்தி நாளை எழுதவிருந்த நீட் தேர்வுக்கு தயாராக இருந்த போதும் தோல்வி பயத்தால் தன்னை மாய்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“