/tamil-ie/media/media_files/uploads/2023/04/arjun-sambath.jpg)
அர்ஜுன் சம்பத்
இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கோவை சங்கனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நாற்பதும் நமதே நாடாளுமன்றமும் நமதே என்ற தலைப்பில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத், இக்கூட்டத்தின் முதல் தீர்மானமாக கொங்கு பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது, இந்தப் பகுதியில் தனி மாநிலமாக இதனை உருவாக்கித் தர வேண்டும், என்ற கோரிக்கை கடந்த 40 வருடங்களாக இருக்கிறது. நமது தமிழகத்தை மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும். தென் மாவட்டங்களை பிரித்து ஒரு மாநிலம் கொங்கு பகுதியை பிரித்து ஒரு மாநிலம் உருவாக்கிட வேண்டும்.
இது தொடர்பான முன்னெடுப்புகளை கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டபூர்வமான அனைத்து முயற்சிகளையும் இந்து மக்கள் கட்சி மேற்கொள்வதற்கு தீர்மானிக்கிறது. தமிழகத்தில் மதம் மாறி சென்றவர்களும் இந்து பட்டியலின சமூக மக்களுக்கு உரிய சலுகைகளை அனுபவித்துக் கொள்ள முடியும் என்ற சட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். இது சட்டபூர்வமாக செல்லாது. இதற்கு அதிகாரம் மத்திய அரசிற்கு தான் உள்ளது. இது அம்பேத்கர் கொள்கைகளுக்கு மட்டும் அல்லாமல் அம்பேத்கரின் சட்டங்களுக்கும் விரோதமானது. இதனை நிறைவேற்றினால் கிறிஸ்தவர்கள் அதனை பயன்படுத்தி கொள்வார்கள். இது இவர்கள் உண்ணுகின்ற உணவை அவர்கள் பிடுங்கி தின்பதாகத்தான் அர்த்தம். இதற்கு மு.க.ஸ்டாலின் துணை போகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை போகிறது. அப்பாவு சட்டசபையை சட்டசபையாக நடத்தாமல் கிறிஸ்தவ சபை போல் நடத்துகிறார்.
எனவே, இந்த மதம் மாறி சென்றவர்களுக்கும் சலுகைகளை அளிப்பதை எதிர்த்து சட்டப் போராட்டத்தை இந்து மக்கள் கட்சி முன்னெடுக்கும். தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகளும் பிரதமரின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.
மீண்டும் மோடி வேண்டும் மோடி நாற்பதும் நமதே நாடாளுமன்றமும் நமதே என்ற அடிப்படையில் இந்து மக்கள் கட்சி தமிழகத்தில் களப்பணி ஆற்றும். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க உறுப்பினர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அண்ணாமலை வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுக்காமல் தி.மு.க-வினர் அண்ணாமலையை சிறுமைப்படுத்த கூடிய வகையிலும் கேலி செய்கின்ற வகையிலும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
அவர்களுக்கு (தி.மு.க) எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்பதற்கு நேரடி பதில் வேண்டும். ஜெயலலிதா விற்கும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தானே தண்டனை கிடைத்தது. மக்களே அண்ணாமலை குறைவாக சொல்லி இருக்கிறார் என பேசி கொள்கிறார்கள்.
அண்ணாமலைக்கான முழு ஆதரவை இந்து மக்கள் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை தற்போது திமுகவினர் முடக்கி வைத்துள்ளனர். அவற்றையெல்லாம் மீண்டும் செயல்படுத்திட வேண்டும் கோவை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் தமிழ்நாடு எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும் என விரும்ப மாட்டார்கள். அங்கிருந்து மருத்துவ கழிவுகள் எலக்ட்ரானிக் கழிவுகளை எல்லாம் இங்கு வந்து கொட்டி விட்டு இங்கிருந்து கனிம வளங்களை கேரளாவிற்கு எடுத்து செல்கிறார்கள். இதற்கு தி.மு.க-வும் உடந்தையாக உள்ளது.
சிறுவாணி தண்ணீரை தடுப்பதற்கு கம்யூனிஸ்ட் ஆட்சி மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. பினராயி விஜயன் தமிழ்நாடு ஒருபோதும் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்ததே கிடையாது.
தி.மு.க அரசியல் நிர்பந்தம் காரணமாக கொங்கு மண்டலத்தை பழிவாங்கக் கூடிய எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்கள். கம்யூனிஸ்டுகள் மற்றும் திமுகவினர் கோவை மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள். குடிநீர் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும். திமுகவினர் இந்து மக்கள் கட்சியின் எந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குவதில்லை என தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.