ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மனைவி மோனிஷா நெல்சன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மோனிஷா நெல்சன் பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2 மாதங்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, முன்னாள் அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் என இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை போலீசார் தேடிவருகின்றனர். தலைமறைவாக இருக்கும் அவரை செல்போன் எண் தொடர்புகளை வைத்து யார் யாரிடம் பேசி உள்ளார் என விசாரணை நடைபெறுகிறது
இதன்மூலம், மொட்டை கிருஷ்ணனுடன் பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியும் வழக்கறிஞருமான மோனிஷா பேசியதால், அவரிடமும் காவல்துறை விசாரணை நடத்தினர். மொட்டை கிருஷ்ணனுக்கு மோனிஷா ரூ.75 லட்சம் பணப் பரிவர்த்தனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இது முற்றிலும் ஆதாரமற்ற தகவல் என மோனிஷா மறுப்பு தெரிவித்து பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், "வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் பணப்பரிவர்த்தை செய்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை கடந்த 7-ம் தேதி அழைத்து விசாரித்தனர். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி உள்ளோம்.
காவல்துறை கோரிய விளக்கத்தை அளித்துள்ளோம். மொட்டை கிருஷ்ணனுக்கு எந்த பண உதவியும் வழங்கவில்லை.. ஆதாரமற்ற தகவல் வெளியாகியுள்ளது. தவறான தகவல்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“