திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் புத்தமத முறைப்படி இறுதிச் சடங்கு செய்யப்பட்டு ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52). கடந்த 5 ஆம் தேதி மாலை பெரம்பூா் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் உடல் இறுதி அஞ்சலிக்காக அவர் வசித்து வந்த பெரம்பூர் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவா் மாயாவதி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள், அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஆம்ஸ்ட்ராங் ஏராளமான மாணவர்களை படிக்க வைத்துள்ளார். மேலும், தொழில் உதவிகளையும் செய்துள்ளார். அவர்களும் அங்கு திரண்டு கண்ணீர்மல்க நின்றிருந்தனர்.
இதையடுத்து, நீதிமன்ற தீா்ப்புக்குப் பின்பு, ஆம்ஸ்ட்ராங் உடல் மாலை 4.45 மணிக்கு பெரம்பூரில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ள பொத்தூருக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது
ஊர்வலத்தின் முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்ணீர் மல்க பேரணியாக நடந்து சென்றனர்.
இரவு 10 மணி அளவில் செங்குன்றத்தை அடுத்த பொத்தூர் ரோஜா நகருக்கு ஊர்வலம் சென்றது. அங்கு உறவினர் லதா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அதிகாலை 1 மணியளவில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு புத்தமத முறைப்படி இறுதிசடங்கு நடைபெற்றது.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்திருந்த 7 புத்த பிட்சுகள் 5 வாசனை திரவங்கள் மூலம் அவரது உடலை தூய்மைப்படுத்தினர். பின்னர், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு வெண்மை நிற ஆடை உடுத்தி சந்தன பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பூர் முதல் பொத்தூர்வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டபோலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடா்பாக கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ரெளடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சோ்ந்த பொன்னை பாலு, அவா் கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூா் திருவேங்கடம், திருநின்றவூா் ராமு என்ற வினோத், அதே பகுதியைச் சோ்ந்த அருள், செல்வராஜ் உள்பட 11 போ் உடனடியாக கைது செய்யப்பட்டனா்.
அதே வேளையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், தலித் இயக்கங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.