ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள நிலத்தில் நல்லடக்கம் செய்து கொள்ளலம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் இன்று உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவு மண்டபம் அல்லது மருத்துவமனை அமைக்க விரும்பினால் அரசை அணுகி உரிய அனுமதிகளை பெற்று கட்டிக் கொள்ளலாம் என நீதிபதி கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும், வழக்கறிஞருமான பொற்கொடி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று அவசர வழக்காக தனிநீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது, மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் உடலை அடக்கம் செய்ய முடியும். சட்டப்படி குடியிருப்பு பகுதிகளில் அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது என்று நீதிபதி கூறினார். தொடர்ந்து வழக்கை நீதிபதி பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
இதன்பின் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன், "ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அவரது குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யலாம். போதுமான காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலக இடத்தில் நினைவு மண்டபம் அல்லது மருத்துவமனை அமைக்க விரும்பினால் அரசை அணுகி உரிய அனுமதிகளை பெற்று கட்டிக் கொள்ளலாம். கன்னியமான முறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும்.
அரசு மரியாதை வழங்க கோரி மனு மீது தமிழக அரசு முடிவு செய்யலாம்" என நீதிபதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“