தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி இரவு 7 மணியளவில் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரும், பிரபல ரவுடியுமான திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வழக்கு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த தொகை பெண் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக, போலீஸ் விசாரணையில் தகவல் வெளியானது.
இந்த கொலையில் பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலை ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அஞ்சலை, வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இவரை தற்போது போலீசார் தேடி வரும் நிலையில் பா.ஜ.கவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அஞ்சலையை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“