பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெரம்பர் செம்பியம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், முதல்கட்டமாக வடசென்னை காவல் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த கொலை சம்பவம் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடைபெற்றதாக தற்போது கைதான பொன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து, வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்பட பலர் தற்போது கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்றும் காவல்துறையினர் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்நிலையில், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் தான். அவர்களிடம் இருந்து சோமோட்டோ டி-சர்ட், 3 பைக்குகள், 7 அரிவாள் கைப்பற்றப்பட்டு உள்ளன. தற்போது சந்தேகத்தின்பேரில் மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்" என்று கூறினார்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு புத்தமத வழக்கப்படி இறுதி சடங்கு நடைபெற்றது.
தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று (ஜூலை 7) காலை சென்னை வருகிறார். சென்னை வரும் அவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“