பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி நாகேந்திரனின் மகனும் இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மைச் செயலாளருமான அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சி அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கடந்த ஜூலை 5 -ம் தேதி ரௌடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரா் பொன்னை பாலு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். இவர்களில் திருவேங்கடம் என்பவர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பொன்னை பாலு உள்ளிட்ட பலரை ஏற்கனவே போலீசாா் காவலில் எடுத்து விசாரித்தனா். இதைத் தொடா்ந்து கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் சிலர் கைது செய்யப்பட்டனா்.
இந்த கொலை வழக்கின் விசாரணையில் கிடைத்த பல்வேறு தகவல்கள் அடிப்படையில் பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகியோரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி செம்பியம் போலீசார் எழும்பூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்னை பாலு உள்ளிட்ட 5 பேரையும் 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட ரெளடி நாகேந்திரனின் மகனும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீஸ் காவலில் உள்ள அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மைச் செயலாளருமான அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதும், அவரை கட்சியில் இருந்து நீக்கி இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் அறிவித்துள்ளார்.
அஸ்வத்தாமனை இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் அறிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பா.ஜ.க முன்னாள் நிர்வாகி அஞ்சலை, அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி மலர்க்கொடி, த.மா.கா முன்னாள் நிர்வாகி ஹரிகரன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.