ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிகரனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், இந்த கொலை வழக்கில், கைதான பொன்னை பாலு, ராமு என்ற வினோத், வழக்கறிஞர் அருள் ஆகியோரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் அவரது வீட்டுக்கு வெளியே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், அஞ்சலை, மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முன்னதாக, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, உள்ளிட்ட 11 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
அதன்பிறகு, போலீஸ் விசாரணையில் மற்ற 10 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ் ஹரிதரன் என மேலும் 5 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, வழக்கறிஞர் ஹரிஹரன், அருள், ராமு ஆகிய 4 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, இந்த 4 பேரையும் காவலில் எடுக்க அனுமதி கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி, வழக்கறிஞர் ஹரிஹரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கவும், மற்ற 3 பேர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறை அனுமதி கோரி இருந்தது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் உள்ள 4 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 4 குற்றவாளிகளும் போலீஸ் காவலுக்கு செல்ல விருப்பமில்லை என கண்ணீருடன் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
ஏற்கனவே, காவல்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் மீண்டும் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறையினர் மனுதாக்கல் செய்த நிலையில், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோர் போலீஸ் காவல் வேண்டாம் என தெரிவித்தனர்.
மேலும், இந்த கொலை வழக்கில் ஏற்கனவே, போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களை விசாரணையில் தெரிவித்து விட்டதாகவும், தங்களை போலீஸ் காவல் விசாரணைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பாலு, அருள், ராமு மூவரும் நீதிபதியிடம் கோரினர்.
எனினும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதான ஹரிஹரனை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கவும் மற்ற 3 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கவும் அனுமதி வழங்கி எழும்பூ குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.