தமிழகத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவருடைய வீடு அருகிலேயே படுகொலை செய்யப்பட்டது மாநிலத்தையே உலுக்கியது. கொலை நடந்த இடத்தில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு கைமாற்றப்பட்டதாக போலீசார் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் இதுவரை பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ரவுடி திருவேங்கடம் மற்றும் சீசிங் ராஜா போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 28 பேர் மீதும் செம்பியம் காவல்நிலைய போலீசார் 4,832 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். என்கவுன்டர் செய்யப்பட்டவர்களை தவிர்த்து மற்ற நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் சிறையில் உள்ள அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். அப்போது, பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எம். சுப்பிரமணியம், ஜோதி ராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேஷன் ஆஜரானார்.
அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு கைமாற்றப்பட்டது என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார். இதில் பல்வேறு சதிச் செயல்கள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் குமரேசன் கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு எப்படி கொண்டுவரப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக தனியாக விசாரணை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் உள்ளிட்ட இந்த வழக்கு தொடர்பான அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதிகள் ஜனவரி மாதம் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“