தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி இரவு 7 மணியளவில் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரும், பிரபல ரவுடியுமான திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை போலீசார் இன்று (ஜூலை 24) தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இரண்டாவது முறையாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை இன்று அதிகாலை பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கொலைக்கான சதித் திட்டம் தீட்டிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“