பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 7-ம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தேடி வந்தனர்.
அப்போது அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளில் வசித்து வருவதாகத் தெரியவந்தது. இதையடுத்து நேற்று தனிப்படை போலீசார் சீசிங் ராஜாவை கடப்பாவில் வைத்து கைது செய்தனர்.
சென்னைக்கு அழைத்து வந்த அவரை நீலாங்கரை அக்கரை பகுதியில் வைத்து இன்று போலீசார் விசாரணை நடத்திய போது அவர் போலீசாரை தாக்கி தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் ரவுடி சீசிங் ராஜா உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்ட்டர் செய்யப்படும் மூன்றாவது நபர் சீசிங் ராஜா ஆகும். இதற்கு முன்னதாக வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“