கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியில் பொதுக் குடிநீர் குழாய் அருகே துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறில் தி.மு.க பிரமுகர் மற்றும் அவரது உறவினர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 28 வயது ராணுவ வீரர் புதன்கிழமை உயிரிழந்தார்.
நாகோஜனஹள்ளி டவுன் பஞ்சாயத்தில் உள்ள தி.மு.க கவுன்சிலரான ஆர்.சின்னசாமி, ராணுவத்தில் வேலை பார்க்கும் பிரபுவையும் அவரது சகோதரர் பிரபாகரனையும் பிப்ரவரி 8ஆம் தேதி குடிநீர் குழாய் அருகே துணி துவைத்துக் கொண்டிருந்ததால் அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: மண்டைக்காடு இந்து சமய மாநாடு; நாகர் எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி கைது
இதைத் தொடர்ந்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டாலும், உள்ளூர்வாசிகள் குறுக்கிட்டதால் சகோதரர்களும் சின்னசாமியும் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். இருப்பினும், அதே மாலையில் சின்னசாமி தனது நான்கு மகன்கள் மற்றும் பிற உறவினர்களுடன் இராணுவ வீரர்களின் வீட்டிற்குச் சென்று இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தலையில் பலத்த காயம் அடைந்த பிரபு ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரபாகரனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
பிரபாகரன் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, சென்னையில் பணியாற்றி வரும் ஆயுதப்படை காவலர் சின்னசாமியின் மகன் குருசூரியமூர்த்தி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பிரபுவின் மரணத்தைத் தொடர்ந்து கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சின்னசாமி மற்றும் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் பிரபுவும், அவரது சகோதரரும் பொங்கல் விடுமுறையில் வீட்டில் இருந்த நிலையில், பிப்ரவரி 9-ஆம் தேதி முகாமுக்கு திரும்பி செல்லவிருந்தனர். பிரபுவுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தமிழக பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை ராணுவ வீரரின் மரணம் மிகுந்த வேதனையும், வருத்தமும் அளிப்பதாகக் கூறினார். தி.மு.க ஆட்சியில் ராணுவ வீரர்கள் சொந்த ஊரில் கூட பாதுகாப்பாக இல்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil