இந்திய ராணுவ உளவுப் பிரிவு அதிகாரி காணாமல் போன வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்தில் உளவுப் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஞானபிரகாசம், தன் மனைவி யமுனா மற்றும் மகளுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 2010ம் ஆண்டு திண்டிவனம் வந்தார். பின் சென்னையில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ஊட்டியில் தங்கிப்படிக்கும் மகனை அழைத்து வரச் சென்றார். அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறி அவரது மனைவி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுசம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், விசாரணையை சிபிசி ஐடி -க்கு மாற்றி உயர் நீதிமன்ற உத்தரவிட்டது.
சிபிசிஐடி விசாரணையிலும் ஞானபிரகாசத்தை கண்டுபிடிக்க முடியாமல் வழக்கை முடித்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி யமுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், காணாமல் போனவர் ராணுவத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க சிபிசிஐடி -க்கு உத்தரவிட்டார்.