செங்கல்பட்டு அருகே ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இறந்து போன ஆதரவற்ற முதியவர்களின் உடலை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு அனுப்பி மருந்து தயாரிப்பதற்காக கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஷ்வரம் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லத்தில் மாதந்தோறும் 40 முதல் 50 பேர் வரை மர்மமான முறையில் மரணமடைவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று முதியோர் இல்லத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று தாம்பரத்தில் இருந்து வந்துள்ளது. அப்போது, அதில் இருந்து மூதாட்டி ஒருவர் தங்களை காப்பாற்றும் படி சத்தமிட்டுள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் வண்டியை நிறுத்திய போது வண்டியின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். உள்ளே பார்த்த போது உயிரிழந்த பெண்ணின் சடலத்திற்கு அருகே அன்னம்மாள் என்ற மூதாட்டியும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு முதியவரும் அமர்ந்திருந்தனர். மேலும் அவர்களுடன் காய்கறி மூட்டைகளும் இருந்துள்ளது.
தகவலறிந்து வந்த போலீசார் 2 முதியவர்களையும் மீட்டதுடன், சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லம் மீது விசாரணை தொடங்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், அப்பகுதி மக்கள் போலீசாரின் விசாரணையில் போது முதியோர் இல்லத்தில் இறக்கும் முதியவர்களின் உடல் பதப்படுத்தப்பட்டு, எலும்புகளில் இருந்து மருந்து தயாரிக்கப்படுவதாகவும், அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மறுத்துள்ள ஆதரவற்றோர் இல்ல நிர்வாகம், இதனை சட்டப்படி சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கோட்டாட்சியர் ராஜூ தலைமையில் சமூக நலம், சுகாதாரம், காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்டோர் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் 60 பேர் வரை உயிரிழந்து உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.