தமிழக அரசின் ரூ.1000 மகளிருக்கு வழங்கும் திட்டம் குறித்து அவதூறான கருத்துகள் பதிவிட்டதாக ட்விட்டர்வாசி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைதுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதற்கிடையில், ட்விட்டரில், “#ArrestMeToo_Stalin” என்ற வார்த்தை ட்ரெண்ட் ஆகிவருகிறது.
முன்னதாக சவுக்கு சங்கரின் குரல் என்ற ட்விட்டர் கணக்கில், தமிழக அரசின் ரூ.1000 வழங்கும் திட்டத்தை விமர்சித்து காணொலி ஒன்று வெளியானது.
அந்தக் காணொலி பழைய சினிமா படத்தின் நகைச்சுவை காட்சி ஆகும். அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தக் காணொலி ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், பெண்கள் இழிவுப்படுத்தப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து ட்விட்டர் அட்மின் ப்ரதீப் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. அரசின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “ஒரு குடும்பத்துக்குள் அதிகாரம் குவிந்து கிடைக்கிறது. ஜனநாயகம் சீரழிக்கப்படுகிறது.
தி.மு.க. அரசு சிறு விமர்சனத்தை பார்த்து கூட திகைத்து நிற்கிறது. ஒரு ட்விட்டர் பதிவிற்காக ஒருவரை கைது செய்திருப்பது சர்வாதிகார நடத்தையை வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரு ட்ரோல் வீடியோவை வெளியிட்டால் கைது செய்யப்பட வேண்டும் என்றால், ஒட்டுமொத்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரும் சிறையில் இருக்க வேண்டும், ஏனெனில் அது அவர்களின் முழுநேர தொழில்.
ஆச்சர்யம் என்னவென்றால், @tnpoliceoffl குற்றம் கைதுக்கு தகுதியற்றது என்று தெரிந்திருந்தும், திமுகவின் உத்தரவின் பேரில் @voiceofsavukku அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துச் சுதந்திரத்தைக் குறைப்பது, நள்ளிரவுக் கைதுகள் மற்றும் சுய விளம்பரங்கள் ஆகியவை திரு @mkstalin ஒரு பாசிசத்தின் உண்மையான குணாதிசயங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சுந்தர் ட்விட்டரில், “முதுகெலும்பு இல்லாத @அறிவாளயம் அரசு மக்களின் குரல்களை முற்றிலும் நசுக்குவதில் ஈடுபட்டுள்ளது.
அவர்களால் மீம்ஸ்களைக் கூட கையாள முடியாது என்பது அதிர்ச்சியளிக்கிறது. பலவீனமான அரசாங்கத்தின் வெளிப்படையான அறிகுறிகள்.
யாரோ பெண்களை மோசமாகப் பிரதிநிதித்துவப்படுத்தியதாகக் கூறி அவர்கள் கைது செய்கிறார்கள் என்றால், ஒவ்வொரு நாளும் கெட்ட வார்த்தை பேசும் பெண்களை வைத்திருக்கும் உங்கள் சொந்த ஆண்களைப் பற்றி என்ன? அவர்களை கைது செய்ய ஏதேனும் திட்டம் உள்ளதா @mkstalin avl? எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் இந்த வீடியோவை ரீட்வீட் செய்து #ArrestMeToo_Stalin என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளார்.
பிரபல அரசியல் விமர்சகர் சங்கர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “7 ஆண்டுகளுக்கு குறைவான சிறைத்தண்டனை உள்ள வழக்குகளில் கைது செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பை மீறி, ஷாஜிதா கூடுதல் எஸ்பி சைபர் கிரைம் சிசிபி இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டார். அவரும், ஒட்டு மொத்த மாநகர போலீசாரும் திமுகவின் கைக்கூலியாக செயல்படுகின்றனர்” என்றார்.
சவுக்கு சங்கர் மற்றொரு ட்வீட்டில் ராஜனை டேக் செய்த ஷங்கர், “@ptrmadurai தான் @CMOTamilnadu மற்றும் @chennaipolice_ மீது @voiceofsavukku நிர்வாகியை கைது செய்ய அழுத்தம் கொடுத்துள்ளார்.
தனது பற்றாக்குறையான பட்ஜெட்டை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று நினைக்கிறார். இந்த அரசுக்கு இது அவமானம்” எனத் தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர், செப்டம்பர் 15, 2022 அன்று, உயர் நீதித்துறையைப் பற்றிய அவரது கருத்துக்களுக்காக கிரிமினல் அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டார்.
அப்போது சங்கர் குற்றவாளி என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சங்கர் முன்பு விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் (டிவிஏசி) ஊழியராக இருந்தார், மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக அமைச்சரின் ஆடியோ டேப்பை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார், இது இறுதியில் அமைச்சரின் ராஜினாமாவுக்கு வழிவகுத்தது.
சம்பந்தப்பட்ட வீடியோ தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை. எனக்கு அப்படியொரு ட்விட்டர் கணக்கு இருப்பதும் தெரியாது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/