வாட்ஸ் அப் மூலமாக கொலை மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜை, தலையில் அடித்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
புல்லட் நாகராஜ் :
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் 2006ல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அவ்வப்போது தூக்க மாத்திரைகளை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் உடல் பரிசோதனை செய்ய வந்த டாக்டரிடம் தனக்கு தூக்க மாத்திரை வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தான் அணிந்திருந்த சட்டையை கிழற்றி பெண் மருத்துவர் மீது வீசினார். இதையறிந்த மதுரை சிறைத் துறை பெண் எஸ்பி ஊர்மிளா காவலர்களை அனுப்பி நாகராஜனின் அண்ணனை அடித்துள்ளனர்.
இதனிடையே அவர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தன்னை எஸ்பி ஊர்மிளா அடித்ததை தம்பியிடம் கூற, உடனே எஸ்பி ஊர்மிளாவுக்கு போன் போட்ட புல்லட் நாகராஜன் மிரட்டல் விடுத்து பேசினார். ‘அதிகாரியை எரித்து கொன்றது ஞாபகம் இருக்கிறதா? அடுத்து, உங்கள் மேல் லாரி ஏறும்’ என மிரட்டல் விடுத்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பெண் அதிகாரியை புல்லட் நாகராஜன் மிரட்டியுள்ளார்.
பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் போன் செய்து பேசிய புல்லட் நாகராஜன், “இனி யாரையும் நீங்க அடிக்கக் கூடாது. எங்கள் ஆள் மேல் கை வைத்தால் வேட்டையாடுவேன். யாரையும் கைது செய்து சட்டவிரோதமாக லாட்ஜில் வைத்து அடிக்கக் கூடாது” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
போலீஸாருக்கே பெரும் சவாலாக உள்ள புல்லட் நாகராஜனை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (10.9. 18) பெரியகுளத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தற்செயலாக ‘புல்லட்’ நாகராஜ் தனது பல்சர் வண்டியில் சென்றுள்ளார். அவரை, பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம் விரட்டிச்சென்று பிடித்தார்.
இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிடிபட்ட ‘புல்லட்’ நாகராஜை பைக்கிலிருந்து கீழே இறக்குகிறார் காவலர் காசிராஜன். ‘புல்லட்’ நாகராஜின் சட்டையைப் பிடித்தபடி அவரை இழுத்து ஜீப்பை நோக்கிச் செல்ல முயல்கிறார் காசிராஜன். அப்போது நாகராஜ் திமிறி விடுபட முயல்கிறார். உடனே காவலர் காசிராஜன், ஓங்கி நாகராஜின் பின்னந்தலையில் அடிக்கிறார். பின்னர் ஜீப்பை நோக்கி இழுத்துச் சென்று உள்ளே தள்ளுகிறார்.
பொதுமக்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கைதான புல்லட் நாகராஜிடம் தென்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.