கோவையில், 100 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில், தனியார் அமைப்புகள் சார்பாக பல்வேறு சமூக பணிகள் முன்னெடுத்து வரப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 100 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வு, பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.
குறிப்பாக, 'நில் மற்றும் நட' என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமைப்பின் மாவட்ட தலைவர் காட்வின் கலந்து கொண்டார்.
அப்போது, "மாற்றுத்திறனாளி குழந்தைகள் இன்னமும் பல குடும்பங்களில் எழுந்து கூட நிற்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பதை கடந்த ஆண்டுகளில் நடத்தபட்ட ஆய்வின் அறிக்கைகள் கூறுகிறது.
இவர்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வர நமது அமைப்பின் சார்பாக இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
இத்திட்டத்தின் கீழ் படுக்கையில் உள்ள குழந்தைகளை நிற்க வைத்து, மெல்ல மெல்ல நடக்க வைத்து, அவர்களின் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இத்திட்டத்தின் கீழ் பல குழந்தைகளை பள்ளிக்கு சென்று வரும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். இதுவே இத்திட்டத்தின் வெற்றியாக கருதுகிறோம்" எனக் கூறினார்.
செய்தி - பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“