மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தனக்கு எதிராக வாக்குமூலங்கள் கொடுத்தவர்களின் விபரங்களை சசிகலா சிறையிலிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு மறைந்த, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்திடம் இருந்து, ஜெயலலிதாவின் மருத்துவர்கள், அரசியல் ஆலோசகர்கள், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் சம்மன் அனுப்பட்டது. சம்மன் அனுப்பிய அனைவரும் நேரில் ஆஜராகி ஜெ. மரணம் தொடர்பான தங்கள் தரப்பு வாக்குமூலத்தை அளித்தனர்.
இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி, விசாரணை ஆணையம் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சம்மன் ஒன்றை அனுப்பியது. அதில், ஜெ.மரணம் தொடர்பான விசாரணையில், சிலர் சசிகலாவிற்கு எதிராக சாட்சியம் வழங்கிருப்பதினால், அவர் ஆணையத்தில், நேராகவோ, வக்கீல் மூலமாகவோ ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பிரமாண பத்திரம் மூலமாகவோ, வாக்குமூலத்தை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சசிகலா தனது தரப்பு வழக்கறிஞர் மூலம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தனகு எதிராக ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தவர்களின் விபரங்கள் வேண்டுமென்றும், அந்த சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆறுமுகசாமி, சாட்சியங்களிடம் சசிகலா குறுக்கு விசாரணை செய்ய 15 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்படுகிறது என்றும், இந்த உத்தரவு வெளியான, 7 நாட்களுக்குள் சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் வேண்டும் என்று உத்ரவிட்டார்.
இந்நிலையில், விசாரணை ஆணையத்தில் சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்களின் முழு விபரங்கள் அடங்கிய ஆவணம் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆவணத்தை சசிகலா பெங்களூர் சிறை அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது
இதனையடுத்து, ஆணையம் சசிகலாவிற்கு விடுத்த 7 நாள் கெடு நாளையுடன் முடிவடைகிறது. எனவே, நாளை சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதுக்குறித்து ஆலோசனை செய்ய, சசிகலா தனது தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியனை பெங்களூருக்கு வரவழைத்து தீவிர ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.