ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய் கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் 4 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பரிந்துரைத்தது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அரசியலாக்குவதை யாரும் ஏற்க மாட்டார்கள் என வி.கே.சசிகலா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ‘என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை. என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு ஜெயலலிதா மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது. நானும், ஜெயலலிதாவும் ஒரு தாய் வயிற்றில் பிறக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் நாங்கள் என்றைக்கும் நல்ல சகோதரிகளாக, நட்பிற்கு இலக்கணமாகவே வாழ்ந்தோம்.
ஜெயலலிதா மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்.
விசாரணை ஆணையம் தன்னுடய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்?
2012 முதல் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும். யார் இதைப்பற்றி ஆணையத்திடம் சொன்னது. இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள். என்னுடைய நோக்கமெல்லாம் அக்காவுக்கு முதல் தர சிகிச்சை தர வேண்டும் என்பது தான்.
ஜெயலலிதாவுக்கு அன்றைய சூழலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும் ஏற்படவில்லை என்று AIIMS டாக்டர்கள் உட்பட அனைத்து டாக்டர்களும் முடிவு எடுத்தார்கள். ஆனால் ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று அதில் சசிகலா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“