ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஜெ. சிகிச்சை தொடர்பாக அப்போலோ வழங்கிய ஆவணங்களில் குளறுபடி?

அப்போலோ மருத்துவமனை வழங்கிய ஆவணங்களில் குளறுபடி

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வழங்கிய ஆவணங்களில் குளறுபடி நடந்துள்ளதை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடமும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. இந்த விசாரணையின் போது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்கிறது. மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்த அறை உள்ளிட்டவை குறித்தும் விசாரிக்கிறது.

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வழங்கிய ஆவணங்களில் குளறுபடி நடந்துள்ளதை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கண்டுபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் முறையாக பராமரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அவசர கதியில் அப்போலோ ஆவணங்களை தயார் செய்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் சந்தேகிக்கிறது. அப்போலோ ஆவண காப்பக மேலாளர் கோவிந்தராஜனிடம் விசாரித்ததில் குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போலோ மருத்துவமனை ஆணையத்தில் அளித்த ஆவணங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன என்றும், 2016 செப்டம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை உள்ள ஆவணங்கள் தேதி வாரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்போலோ தந்த ஆவணங்களில் இடைச் செருகல் இருப்பதை கோவிந்தராஜன் ஒத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close