லஞ்ச வழக்கில் கைதான பொது கணக்காயர் அருண் கோயலுக்கு 2 நாள் போலீஸ் காவல்!

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் கணக்காளர் பணி நியமனத்திற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பொது கணக்காயர் அருண் கோயலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக பொது கணக்காயர் அருண் கோயலை இரண்டு நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் கணக்காளர் பணி நியமனத்திற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பொது கணக்காயர் அருண் கோயலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த மூத்த கணக்கு அதிகாரி கஜேந்திரன், பொதுப்பணித் துறையின் விழுப்புரம் டிவிஷனில் கணக்காளராக பணி நியமனம் பெற விரும்பி லஞ்சம் கொடுத்த சிவலிங்கம், அதற்கு உதவியாக இருந்த திருவள்ளூர் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் எல்.எஸ்.ராஜா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கில் அருண் கோயலை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பில் சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கு சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி திருநீலப்பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அருண் கோயல் சார்பில் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கூடாது சிபிஐ காவலுக்கு அனுப்ப கூடாது என வாதிடப்பட்டாது.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச பணம் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் மேலும் இதில் தொடர்புள்ளவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும். எனவே மூன்று நாட்கள் சிபிஐ போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, அருண் கோயலை இரண்டு நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிப்பதாகவும், அருண் கோயலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை முடித்து வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

×Close
×Close